சென்னை - திருவள்ளூர் வழித்தடத்தில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி, புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை கடந்த 25-ம் தேதி துவங்கியது. இந்த ஆண்டு இயல்பை விட சற்று அதிகமாக வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஆரம்பத்திலேயே தெரிவித்தது.

 அதன்படி, பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகத்துக்கு இயல்பான அளவை விட அதிக அளவில் மழை பதிவாகி வருவதை பார்க்க முடிகிறது.

train1

அதிலும் வங்க கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடந்த 5 நாட்களாக, தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்குகிறது.

அதன் தொடர்ச்சியாக வங்கக்கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்றிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இதன் காரணமாக ஆவடி, அம்பத்தூர் ஆகிய இடங்களில் ரயில் நிலைய தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 இந்த தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் செல்லும் பெரும்பாலான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மழையிலும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

t2

திருவொற்றியூர் – கொருக்குப்பேட்டை இடையே கனமழை பெய்து வருவதால், சென்னை - கும்மிடிப்பூண்டி இடையேயான புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவை வழக்கம்போல நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது..

சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வழித்தடத்தில், அனைத்து சேவைகளும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், ‘நாங்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம், ரயில் சேவைகளில் ஏற்படும் இடையூறுகள் குறித்து தொடர்ந்து உங்களுக்கு அறிவிப்போம்’ என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 170 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாகவும், இது சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தென்மண்டல வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் 27 கி.மீட்டரில் இருந்து தற்போது 21 கிமீ ஆக குறைந்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது 40 - 45 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

Dear passengers, due to waterlogging of tracks at Avadi and Ambattur, most of the services from MAS to Tiruvallur have been suspended. There are delays on the north side towards Gummidipoondi due to heavy rains between Tiruvottiyur and Korukkupet. Please plan travel accordingly.

— DRM Chennai (@DrmChennai) November 11, 2021