சென்னை புறநகர் ரயில்களில் கடைப்பிடிக்கப்பட்ட கொரோனா பயணக் கட்டுப்பாடுகள், திங்கள் கிழமை முதல் நீக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் துவங்கிய கொரோன வைரஸ், சுமார் 200 நாடுகளுக்கும் மேல் பெருந்தொற்றாக பரவியது. இந்த கொரோனா தொற்றால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன.

இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நாடுகள் பொது முடக்கத்தை அறிவித்தன.  

பொதுமுடக்கத்தால் மருத்துவத்துறை, சுகாதாரத்துறையை தவிர உலகமே வீட்டுக்குள் முடங்கியது. குறிப்பாக இந்தியாவில் பொதுமுடக்கத்தால், பொதுமக்கள் வேலையின்றி, உணவின்றி அத்தியாவசிய தேவைகளுக்கே தவித்து போயினர். மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், கொரோனா குறைந்தபாடில்லை.

p1

கொரோனா முதல் அலை முடிந்து, மக்கள் சற்று பெருமூச்சு விட்டநிலையில், இரண்டாம் அலையால் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கத்தால், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். 

தற்போது பல்வேறு நாடுகளும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி வருவதால், ஓரளவு ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், சென்னை புறநகர் ரயில் சேவையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. 

இது படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வந்தது. கடைசியாகப் பணியாளர்கள் அல்லாத ஆண் பயணிகளுக்கு மட்டும் நேரக் கட்டுப்பாடு மற்றும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை மட்டும் கடைப்பிடிக்கப்பட்டது. 

தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோர் அதிகப்படியான எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், தொற்று பரவும் அபாயம் குறைந்துள்ளது.

p2

இதனிடையே, புறநகர் ரயில் சேவைக்கான கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாக மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"கோவிட்-19 காரணமாக புறநகர் ரயில் சேவைகளில் விதிக்கப்பட்ட அனைத்துப் பயணக் கட்டுப்பாடுகளும் 15 நவம்பர் 2021 (திங்கட்கிழமை) முதல் நீக்கப்படுகின்றன. இதன் மூலம், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை - வேளச்சேரி ஆகிய பகுதிகளில் அனைத்துத் தரப்புப் பயணிகள் உட்பட பொதுமக்கள் நேரத் தடையின்றிப் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

முன்பதிவு செய்யப்படாத தனிநபர், ரிட்டர்ன் பயண டிக்கெட்டுகள் மற்றும் சீசன் டிக்கெட்டுகளை அனைத்து வகைப் பயணிகளும் பெறலாம். இந்த டிக்கெட்டுகளை யு.டி.எஸ். மொபைல் ஆப் மூலமாகவும் பெறலாம்.

இருப்பினும், பயணிகள் முகக்கவசம் அணிதல், சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளி போன்ற கோவிட் பாதுகாப்பு விதிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்'' இவ்வாறு தெற்கு ரயில்வே நிர்வாக மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாகவும், சென்னை புறநகர் ரயில்களில் கடைப்பிடிக்கப்பட்ட கொரோனா பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன.