சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு மேலும் 29 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா என்னும் கொடிய வைரஸ், சென்னையில் மையம் கொண்டு, அனைத்து தரப்பு மக்களையும் ஆட்டி படைத்து வருகிறது. இதனால், நாள் தோறும் ஏற்படும் பாதிப்புகளும் அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனிடையே, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 10 பேர், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் இன்று அடுத்தடுத்து கொரோனாவுக்கு பலியானார்கள்.

அத்துடன், சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உட்பட சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு மொத்தம் ம் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காகத் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறைக்கு 50 துரித செயல் வாகனங்களை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

மேலும், சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களைச் சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது.

அதன்படி, சென்னையில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,990 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், அண்ணா நகர் மண்டலத்தில் 2,383 பேரும், தேனாம்பேட்டையில் 2,447 பேரும், ராயபுரம் மண்டலத்தில் 1,999 பேரும், தண்டையார்பேட்டையில் 1,810 பேரும், திரு.வி.க. நகரில்  1,898 பேரும், அம்பத்தூரில் 1,314 பேரும், வளசரவாக்கத்தில் 1228 பேரும், அடையாறு பகுதியில் 1,673 பேரும், திருவொற்றியூரில் 1,243 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக, சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை தற்போது 70,071 ஆக உயர்ந்துள்ளது. இதில், 22,890 பேர் தற்போது சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், சென்னை ராயபுரம் காப்பகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட 35 குழந்தைகள் குணமாகிவிட்டனர் என்று, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ராயபுரம் குழந்தைகள் காப்பகத்தில் புதிதாக கொரோனா தொற்று இல்லை என்றும், தமிழகத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் எந்தவொரு குழந்தைக்கும் கொரோனா தொற்று இல்லை என்றும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில், தமிழக அரசு இன்று உறுதிபடத் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் அதிகரித்துக் காணப்படும் கொரோனா வைரசை தடுக்கும் விதமாக, பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மத்தியக் குழு, நாளை மாலை சென்னை வருகிறது.  

மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான குழு சென்னை வருவதால்; முதலமைச்சர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர்,  சுகாதாரத்துறை செயலருடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல், கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் அதனைத் தடுப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் குறித்தும் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, அரியலூரில் 347 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே, காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.  

தமிழகத்தில் இதுவரை 9 மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது 10 வது மருத்துவக் கல்லூரியாக 347 கோடி ரூபாய் செலவில் அரியலூரில் கட்டப்படும் மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் தற்போது அடிக்கல் நாட்டினார். 

மேலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போலீசார் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மதுரையில் பணியாற்றும் 57 வயதிற்கு மேற்பட்ட காவலர்களுக்கு ஓய்வு வழங்கக் காவல் துறை ஆணையர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.