சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 28 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகம் முழுவதும் இன்று மேலும் 1124 பேருக்கு கொரோனா தொற்று புதிதாகப் பரவி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் தொடர்ந்து பரவி வருகிறது. இதனால், நாள் தோறும் கொரோனாவினால் ஏற்படும் பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளன. அதன்படி, சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இது வரை 28 பேர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 பேர், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 6 பேர் உயிரிழந்தனர். 

மேலும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரும், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேரும் இன்று உயிரிழந்தனர். அதேபோல், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உட்பட சென்னையில் இன்று மட்டும் மொத்தம் 28 பேர் பரிதாபமாக கொரோனாவால் உயிரிழந்தனர். 

அத்துடன், சென்னை ஆயுதப்படை பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்த 31 வயதான நாகராஜ், பணியில் இருக்கும் போதே அவருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையில் ஏற்கனவே, காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் என 2 போலீசார் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், தற்போது 3 வதாக போலீசார் ஒருவர் உயிரிழந்திருப்பது போலீஸ் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும், சென்னையில் இறந்த பெண்ணின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்த பெண்ணின் கணவர், கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதிக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2837 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோடம்பாக்கத்தைத் தொடர்ந்து, ராயபுரத்தில் 2416 பேரும், அண்ணா நகரில் 2349 பேரும், தேனாம்பேட்டையில் 2317 பேரும், தண்டையார்பேட்டையில் 2275 பேரும், அடையாறு பகுதியில் 1913 பேரும், திரு.வி.க. நகரில் 1858 பேரும், திருவொற்றியூரில் 1214 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாகச் சென்னையில், தற்போது 24,890 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

அதேபோல், சென்னை அருகில் உள்ள மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,637 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,983 ஆக உயர்ந்துள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அந்த மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 6,824 ஆக அதிகரித்துள்ளது. 

மதுரை மாவட்டத்தில் இன்று புதிதாக 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மொத்த  எண்ணிக்கை 4380 ஆக உயர்ந்துள்ளது. 

நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அதிகபட்சமாக நெல்லை மாநகர பகுதியில் 72 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், நெல்லை மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,125 ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக, தேனி மாவட்டத்தில் இரண்டு மருத்துவர்கள் உள்பட இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், தேனியில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,167 ஆக உயர்ந்துள்ளது. தேனியில் தற்போது 810 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர். அந்த மாவட்டத்தில் இதுவரை 385 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

வேலூரில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 166 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், அந்த மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,126 ஆக உயர்ந்துள்ளது. 

கோவையில் கொரோனா பரிசோதனையில் முறைகேடு எனப் புகார் எழுந்ததை அடுத்து, அங்கு 4 தனியார் பரிசோதனை மையங்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை கூறி உள்ளது.