“சென்னை மக்கள் பயப்பட வேண்டாம் என்றும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போதைக்கு தண்ணீர் திறக்கப்படாது” என்றும், தலைமை பொறியாளர் அசோகன் தெரிவித்து உள்ளார்.

செம்பரம்பாக்கம் ஏரிகள் நிரம்பினாலும், அந்த ஏரிகள் திறந்து விடப்பட்டாலும் என்ன நடக்கும் என்பதைக் கடந்த காலங்கள் சென்னை மக்களுக்கு உணர்த்தி இருக்கும். அந்த பயமும், அச்சமும் சென்னை மக்கள் மத்தியில் இருந்து இன்னும் நீங்க வில்லை என்பதே உண்மை. சென்னையில் ஒவ்வொரு மழை காலத்தின் போதும், அந்த பழைய நினைவுகள் சென்னை மக்களைப் பயத்தில் ஆழ்த்திச் செல்வது வாடிக்கையாக நடக்கும் ஒரு நிகழ்வாக மாறிப்போய் உள்ளது.

அதன் படி, தற்போது தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை காலம் என்பதால், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தற்போது தொடர்ந்து கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், சென்னையில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு இடையிலும், மேலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்யும் தொடர் கன மழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி, கிருஷ்ணா நதி நீரான தொடர் மழையால் மிக வேகமாகவே நிரம்பி வருகிறது. நேற்று காலை நேர நிலவரப்படி, ஏரியின் நீர்மட்டம் 20.70 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2,781 மில்லியன் கன அடியாகவும், ஏரிக்கு நீர்வரத்து 1,720 கன அடியாகவும் இருந்தது.

இந்த நிலையில், இன்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியைத் தாண்டி உள்ளது. தற்போது, செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரமான 24 அடியில் 21.13 அடிக்குத் தண்ணீர் தற்போது வரை நிரம்பி உள்ளன. 

அதே நேரத்தில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1,086 கன அடியாக உள்ளது. இன்று மாலைக்குள் அந்த ஏரியில் நீர் மட்டம் 22 அடியை எட்டினால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செம்பரக்கம் ஏரி 22 அடி உயரத்தை விரைவில் எட்டவுள்ள நிலையில், அந்த ஏரியின் 5 கண் மற்றும் 19 கண் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற தற்போது அதிக வாய்ப்பு உள்ளது. இதனால், அங்குள்ள கரையோர மக்களுக்கு தற்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அதே போல், நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து எந்த நேரத்திலும் உபரிநீர் திறந்து விட வாய்ப்பு உள்ளதால், அடையாறு ஆற்றின் கரையோரம் சென்னை நகரில் வசிக்கும் பொது மக்களுக்கும் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதால், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அம்பத்தூர் காவல் துணை ஆணையருக்கு பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பி உள்ளது. 

மேலும், தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் வட கிழக்கு பருவமழை காரணமாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் முக்கிய நீர் நிலைகளில் ஆயிரத்து 600 மில்லியன் கன அடி நீர் அதிகரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 909 ஏரிகளில், 67 ஏரிகள் 100 சதவீதம் கொள்ளளவை தற்போது எட்டி உள்ளது. 

அதே நேரத்தில், இதில் 127 ஏரிகள் 75 சதவீதம் தனது கொள்ளளவை எட்டியுள்ளது. 206 ஏரிகள் 50 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளன. 180 ஏரிகள் 25 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளன. 324 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாகத் தனது கொள்ளளவை எட்டியுள்ளது. 4 ஏரிகள் நீர்வரத்து இல்லாமல் உள்ளது என பொதுப்பணி துறை தற்போது தெரிவித்துள்ளது. இதில் ஏரையூர், செம்பாக்கம், நத்தப்பேட்டை, வையூர் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வையாவூா், நத்தப்பேட்டை, எறையூா் தேவனேரி, தாத்தனூா், குண்டுப் பெரும்பேடு, ஆரனேரி பெரிய ஏரி, நன்மங்கலம், புளிக்கொரடு இடும்பன் ஏரி, செம்பாக்கம் ஆகிய ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, மொத்தமுள்ள 909 ஏரிகளில் காஞ்சிபுரத்தில் 13 ஏரியும், செங்கல்பட்டில் 54 ஏரியும் முழுமையாக நிரம்பியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, “பருவமழை தீவரம் அடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார் நிலையில் இருப்பதாக” பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். 

“பேரிடர் காலங்களில் உடனடியாக செயலற்றிட 43,409 முதல் நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், 3,915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2897 JCB இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினரிடம் பயிற்சி பெற்ற 5,505 காவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்” என்றும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.