சென்னையில் குளித்து விட்டு வந்த பெண்ணை போலீஸ் அதிகாரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி 
உள்ளது.

கடந்த ஒரு மாத்திற்கு மேலாகத் தமிழக போலீசாருக்கு பில்லி சூனியம் வைத்தார் போல், தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். அதன்படி, தற்போது மேலும் ஒரு போலீஸ்காரர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

சென்னை பெரம்பூர் ரமணா நகர் சுப்பிரமணியன் கோயில் தெருவைச் சேர்ந்த கண்ணன், வேப்பேரி போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். 

இதனிடையே, காவலர் கண்ணன், தான் குடியிருக்கும் அதே வீட்டில் சில வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார். இந்த வீட்டில், 30 வயதான கலையரசி, வாடகைக்கு தன் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.

இந்நிலையில், இன்று காலை கலையரசியின் கணவரும், அவரது மாமியாரும் வெளியே சென்றிருந்த நிலையில், கலையரசி அவர் வீட்டில் உள்ள குளியலறையில் குளித்துவிட்டு வெளியே வந்துள்ளார்.

அப்போது, அந்த இடத்தில் காத்திருந்த தலைமைக் காவலர் கண்ணன், கலையரசியின் கையைப் பிடித்து இழுத்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த கலையரசி, அவரிடமிருந்து தப்பித்து, பக்கத்து வீட்டிற்கு ஓடிச் சென்று, அங்குத் தஞ்சமடைந்தார்.

இதனையடுத்து, கலையரசியின் கணவரும், அவரது மாமியாரும் வீடு திரும்பி உள்ளனர். அப்போது, வீட்டின் உரிமையாளர் கண்ணனால் தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்து, அவர் கூறி கதறி அழுதுள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த கலையரசியின் கணவரும், அவரது மாமியாரும் தலைமைக் காவலர் கண்ணனிடம் சண்டைக்குச் சென்றனர். இதனால், கோபமடைந்த தலைமைக் காவலர் கண்ணன், கலையரசியின் கணவர் மற்றும் அவரது மாமியாரைத் தாக்கியதாகத் தெரிகிறது. 

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட கலையரசி, அவரது  கணவரும், அவரது மாமியாரும் அங்குள்ள செம்பியம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் கண்ணன் மீது புகார் அளித்தனர். 

அத்துடன், “அக்கம் பக்கத்து வீட்டாரிடமும் கண்ணன் இதுபோன்று தவறாக நடந்துள்ளதாகவும்” அவர்கள் குற்றம்சாட்டினார்.

குறிப்பாக, “ 'நான் காவல் துறையில் இருப்பதால், யாரும் என்னை ஒன்றும் செய்ய முடியாது' என்று கூறி கண்ணன் அனைவரையும் மிரட்டுகிறார்” என்றும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசாரே, தனது அதிகாரத்தையும், தனது காவலர் பணியையும் தவறாகப் பயன்படுத்தி, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது, அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.