“வாடகைதாரர்களின் மொத்த பயோடேட்டாவும் எங்கட்ட கொடுக்க வேண்டும்” என்று, வீட்டு உரிமையாளர்களுக்குத் தமிழக காவல் துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கிட்டதட்ட ஒரு கோடிக்கும் மேலான மக்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள், சென்னைக்கு குடிபெயர்ந்தும், வேலைக்காகவும் தங்கியிருந்தும் வசித்து வருகின்றனர்.

இவர்கள் மட்டுமல்லாது, வட மாநிலங்களில் இருந்தும் பல லட்சம் பேர் தமிழகத்தில் வேலைக்காக வந்து, இங்கேயே தங்கி உள்ளனர். இதனால், தலைநகர் சென்னையானது, கூட்ட நெரிசலால் நிரம்பி வழிகிறது. 

இப்படியான சூழலில் தான், தமிழகத்தின் தலைநகர் சென்னையை இன்னும் தீவிரமான கண்காணிப்பின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கையாக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் தான், சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இன்று புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டு உள்ளார். அந்த அறிவிப்பில், 

“வீட்டு உரிமையாளர்கள் அனைவரும், தங்களது வீட்டை வாடகைக்கு விட்ட 15 நாட்களுக்குள் அருகில் உள்ள காவல் நிலையங்களில், வாடகைதாரர்களின் பெயர், அவர்களது ஒரு புகைப்படம், அவர்களது நிரந்தர முகவரி, ஏற்கனவே வசித்த வீட்டின் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், அதற்காக உள்ள விண்ணப்ப மனுக்களில் எழுதி, காவல் நிலையங்களில் சமர்பிக்க வேண்டும்” என்று, அதிரடியாக உத்தரவிட்டார்.

அத்துடன், “சென்னையில் உள்ள வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்களோடு போடும் ஒப்பந்தம் பற்றி எதுவும் காவல் துறையினருக்குத் தெரிவிக்கத் 
தேவையில்லை” என்றும், அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், “வீட்டு வாடகைதாரர்கள் பற்றிய முழு தகவல்களும் காவல் நிலையங்களில் மிகவும் ரகசியமாக வைக்கப்படும்” என்றும், அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

“வீட்டு உரிமையாளர்கள் தரும் விபரங்கள் அனைத்தும், அந்தந்த காவல் நிலையங்களில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும் என்றும், அந்தந்த பகுதி துணை ஆணையர்கள் அலுவலகங்களிலும், ஆணையர் அலுவலகத்தில் உளவுப் பிரிவு அல்லது குற்ற ஆவண காப்பகத்திலும் இந்த விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைப்பார்கள்” என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளில் இருந்து வாடகைக்கு வருபவர்களும், கண்டிப்பாக இதனை பதிவு செய்ய வேண்டியது அவசியம்” என்றும், அந்த அறிக்கையில் காவல் ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.

குறிப்பாக, “மக்களின் பாதுகாப்பு கருதியே, பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீட்டில் வாடகைக்குக் குடியிருப்போரின் விவரங்களைக் காவல் நிலையங்களில் தெரியப்படுத்த வேண்டும்” என்று, உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளது கவனிக்கத்தக்கது” என்றும், அந்த அறிக்கையில், சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுட்டிக்காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.