சென்னை மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த இராஜிவ் காந்தி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முது நிலை மருத்துவ முதலாம் ஆண்டு அறுவை சிகிச்சை மாணவர் டாக்டர் லோகேஷ் , கொரோனா பணிக்குப் பின்பு , தனிமைப் படுத்தலில் இருந்த பொழுது திடீரென்று மர்மமான முறையில் இறந்துள்ளார். 

இந்த விவகாரத்தில், நேர்மையான, வெளிப்படையான விசாரணைக்கு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் விடுத்துள்ள ஊடகங்களுக்கான செய்தி இங்கே...

``சென்னை மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த இராஜிவ் காந்தி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முது நிலை மருத்துவ முதலாம் ஆண்டு அறுவை சிகிச்சை மாணவர் டாக்டர் லோகேஷ் , கொரோனா பணிக்குப் பின்பு , தனிமைப் படுத்தலில் இருந்த பொழுது திடீரென்று மர்மமான முறையில் இறந்துள்ளார்.

இந்த இறப்புக் குறித்து நேர்மையான, வெளிப்படையான  விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். மரணம் அடைந்த Dr. லோகேஷ் அவர்களுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் அஞ்சலியை செலுத்துகிறது.

அவரது பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ரூ 50 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்கிட வேண்டும். முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்கிட வேண்டும்.

இராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டு பணி 6.00 மணி நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், சென்னை மருத்துவக் கல்லூரியோடு இணைந்த பல மருத்துவமனைகளிலும், பல மருத்துக் கல்லூரிகளிலும், கொரோனா வார்டு பணி 12 மணி  நேரத்திற்கு மேல் வழங்கப்படுகிறது.

இது கண்டனத்திற்குரியது. இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.

எனவே, 6 மணி நேரம் மட்டுமே கொரோனா வார்டு பணி என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். கொரோனா தொற்றுக்கு உள்ளான பயிற்சி மருத்துவர்கள் ,பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு நிவாரணமாக ரூ 2 லட்சம் வழங்கிட வேண்டும்.

அவர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கிட வேண்டும். அவர்களுக்கான பயிற்சிக் கால ஊதியத்தை உயர்த்திட வேண்டும். கொரானா காலக்கட்டத்தில் இறந்த அனைத்து பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் இழப்பீடாக வழங்கிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விரைவில் அரசு இந்த விஷயத்தில் தலையிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.