சென்னையில் அண்ணியுடன் கள்ளக் காதலில் இருந்த தம்பியை, அண்ணனே தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மயிலாப்பூர் லாலா தோட்டத்தைச் சேர்ந்த பழனி - மரியா தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பழனி, அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். பழனிக்கு, செந்தில் குமார் என்ற தம்பி உள்ளார். இவரும், அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். 

இதனிடையே, பழனிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் பல நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இதனையடுத்து, பழனியின் தம்பி செந்தில் குமார், இந்த சூழலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், தனது அண்ணன் பழனியின் மனைவி அண்ணி முறையானவரிடம், கள்ளக் காதல் உறவில் இருந்து வந்திருக்கிறார். இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விசயத்தை தெரிந்துகொண்ட அண்ணன் பழனி, தன் தம்பி செந்தில் குமாருக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்து உள்ளார். 

ஆனாலும், அண்ணி உடனான கள்ளக் காதலைத் தம்பி செந்தில் குமார் தொடர்ந்துள்ளார். இந்த தகவல், புதிதாகத் திருமணம் செய்துகொண்டு வந்த செந்தில் குமாரின் மனைவிக்குத் தெரிய வந்துள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், கணவனை கண்டித்துள்ளார். ஆனால், மனைவியின் பேச்சைக் கேட்காமல், அவர் கள்ளக் காதலில் தொடர்ந்ததால், செந்திலின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

செந்தில்குமாரின் மனைவி உயிரிழந்ததை அடுத்து, அண்ணி உடனான கள்ளக் காதல் மீண்டும் வலுப்பெற்று உள்ளதாகத் தெரிகிறது. இந்த தகவல் அண்ணன் பழனிக்கு தெரிய வந்தது. இதனால், அவர்களது குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனை எழுந்து உள்ளது. தொடர்ந்து அவர்களுக்குள் பிரச்சனை வரவே, பழனியின் மனைவி, தன் கணவனிடம் சண்டை போட்டுக்கொண்டு, தன் கணவனை விட்டுப் பிரிந்து தன் குழந்தைகளுடன் தன் அம்மா வீட்டிற்குச் சென்றுள்ளார்.

பழனியின் மனைவி, தன் அம்மா வீட்டில் வசித்து வந்த நிலையில், கணவனை வெறுப்பேற்றும் விதமாக, செந்தில் உடன் தான் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கணவன் பழனிக்கு அனுப்பி வைத்து, அவரது கோபத்தை மேலும் தூண்டி உள்ளார்.

இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாப்பூரில் உள்ள செந்தில் வீட்டிற்குப் பழனியின் மனைவி வந்துள்ளார். அப்போது, பழனிக்கும் அவரது மனைவிக்கும் இடையே மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. அப்போது, தம்பி செந்தில், அண்ணன் பழனியைப் பிடித்துக்கொள்ளவே, அவர் மனைவி கணவன் என்று பார்க்காமல் செருப்பால் பழனியை அடித்து உள்ளார். 

இதில், கடும் அவமானம் அடைந்த பழனி, 1 ஆம் தேதி இரவு தம்பி செந்தில் குமார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு செந்தில் செம போதையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, செந்தில் தலையில் கல்லைப்போட்டு அவரை கொலை செய்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பழனி தலைமறைவாகி உள்ளார். 

இது குறித்து விரைந்து வந்த மயிலாப்பூர் போலீசார், செந்தில்குமார் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக, பட்டினப்பாக்கம் பகுதியில் சுற்றித்திரிந்த பழனியை, போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.