சென்னையில் கடந்த 5 ஆண்டுகளாகத் தான் போலீஸ் என்று கூறி, 50 க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, மிரட்டி பணம் பறித்து வந்த நபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

சென்னை மணலியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது ஹேண்ட் பேகில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தையும், செல்போனையும் மர்ம நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டிப் பறித்துக்கொண்டு சென்று விட்டதாக, மணலி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். 

இது தொடர்பான புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், வழிப்பறி நடந்த விதம் குறித்தும், எப்படியெல்லாம் அவன் மிரட்டினான் என்பதும் குறித்தும் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த பெண் அளித்த பதிலில் போலீசாருக்கு சற்று சந்தேகம் வந்து உள்ளது. இதனால், அந்த பெண்ணிடம் மேலும் துருவித் துருவி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான், அந்த பெண், தமக்கு நேர்ந்த கொடுமையான சம்பவம் குறித்துக் கூறியுள்ளார்.

அதாவது, திருமணமான அந்த பெண், தனது ஆண் நண்பருடன் மாதவரம் பால்பண்ணை அருகே உள்ள பூங்காவில் ரகசியமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்து உள்ளார். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த ஒருவர், “நான் போலீஸ்” என்று கூறி, இருவரையும் செல்போனில் போட்டோ எடுத்து உள்ளார். அதன் தொடர்ச்சியாக, “இந்த போட்டோவை உன் கணவனிடமும், குடும்பத்தினரிடமும் காட்டப்போவதாக மிரட்டி உள்ளார். இதனால், பயந்து போன அந்த பெண் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே திகைத்துப் போய் நின்று உள்ளார். 

அத்துடன், அந்த பெண்ணின் ஆண் நண்பரை கடுமையாக மிரட்டியும், எச்சரித்தும் அங்கிருந்து துரத்தி அடித்து உள்ளார். அந்த ஆண் நண்பர் சென்ற பிறகு, அந்த பெண்ணை மிரட்டியே அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாலியல் இச்சை தீர்ந்த பிறகு, அந்த பெண்ணை மேலும் மிரட்டி அவரிடமிருந்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தையும், அவர் பயன்படுத்திய செல்போனையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். 

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், போலீஸ் சீருடையில் வந்த அந்த நபர் யார் என்று விசாரிக்கத் தொடங்கினர். 

மேலும், அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து அந்த போலீஸ் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதே நேரத்தில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தும், பெண்ணிடம் பறிக்கப்பட்ட செல்போன் சிக்னல் 

அடிப்படையிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அந்த நேரம் பார்த்து, அந்த பகுதியில் போலீஸ் சீருடையில் ஒருவர் வந்துள்ளார். அவர் மீது சந்தேகப்பட்ட போலீசார், அவரை பிடித்து விசாரித்து உள்ளனர்.  

விசாரணையில், அவர் தான் அந்த போலீயான போலீஸ்காரர் என்பது தெரிய வந்தது. போலீஸ் போல் நடித்து, மணலியில் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து பணம் பறித்தவர் இவர் தான் என்பதும் தெரிய வந்தது. 

அதன் தொடர்ச்சியாக அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், “அவர் பெயர் டிக்கி மணி என்கிற பிச்சை மணி என்பது தெரிய வந்தது. அதன் தொடர்ச்சியாகக் காவல் நிலையத்திற்கு டிக்கி மணியை அழைத்துச் சென்று போலீசார், அங்கு வைத்து அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இன்னும் பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது. 

அதாவது, “சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிச்சை மணி, சொந்தமாக 5 டேங்கர் லாரிகளை வைத்து தொழில் செய்து வருகிறார். அவர் பார்ப்பதற்கு போலீஸ்காரர்களை போல் தோற்றம் இருந்ததால், பல இடங்களில் தன்னை போலீசார் என்றே அறிமுகப்படுத்திக் கொண்டு உள்ளார். அப்போது, 
அவருக்குச் சகல வித மரியாதைகளும் கிடைத்து உள்ளது. இதனால், மாதவரம், புழல் பகுதியில் உள்ள ஒதுக்குப்புறமான இடங்களில் தனிமையில் சந்திக்கும் ஜோடிகளையும், காதலர்களையும், “நான் ஒரு போலீஸ்” என்று, தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டு, மிரட்டியே ஆண்களை விரட்டிவிட்டு, அங்கு மாட்டிக்கொள்ளும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து” வந்துள்ளார்.

அந்த பகுதியில் இப்படியே கடந்த 5 ஆண்டுகளாக இந்த பாலியல் பலாத்கார செயலும், இந்த மிரட்டல் செயலிலும் டிக்கி மணி ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. 

குறிப்பாக, “கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை 50 க்கும் மேற்பட்ட பெண்களை டிக்கி மணி மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்து உள்ளதாகவும்” போலீசாரிடம் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்து உள்ளான். இதில், பாதிக்கப்படும் பெண்கள் “இந்த விசயம் தன் குடும்பத்தினருக்குத் தெரிந்துவிடுமோ என்ற பயம் காரணமாகவும், அவமானம் கருதியும் எந்த பெண்களும் புகார் கொடுக்காமல் இருந்து உள்ளனர். இதையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட டிக்கி மணி, இதுபோன்ற பாலியல் வெறிச்செயலில் ஈடுபட்டு வந்துள்ளான். 

அதே நேரத்தில், இதே போன்ற ஒரு வழக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு டிக்கி மணி கைது செய்யப்பட்டதும் போலீசார் தற்போது கண்டுபிடித்து உள்ளனர். இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.