பெண்ணை மோசடியாகத் திருமணம் செய்து போதை மருந்து கொடுத்து ஆடை இல்லாமல் வீடியோ எடுத்து மிரட்டிய கணவன் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. தமிழ் நாட்டில் தான், அதுவும் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு லண்டன் வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மருத்துவ ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர், ஒரு பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், “என்னை மோசடியாகத் திருமணம் செய்துகொண்டு, பாலியல் ரீதியாக கொடுமை செய்த தனியார் நிறுவன தலைமை அலுவலர் ராஜ்குமார் அய்யாசாமி மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, ஒரு புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் பாட்ஷா என்பவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “லண்டனில் ராஜ்குமார் அய்யாசாமி தனியார் தொழில் நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, லண்டன் வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மருத்துவ ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளரும், ராஜ்குமார் அய்யாசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டுக் காதலித்து வந்து உள்ளனர். 

இவர்கள் காதலிக்கத் தொடங்கும் முன்பாக, “அய்யாசாமி முதல் திருமணம் செய்து விவகாரத்து பெற்றதாகக் கூறி, அனுதாபத்தைப் பெற்றுள்ளார்.  

திருமணத்திற்கு முன்பு அந்த பெண்ணிடம் வாட்ஸ்ஆப்பில் பாலியல் ரீதியாக பேசி வீடியோக்களை அனுப்பிய தோடு, அந்த பெண்ணை காதலிக்கத் தூண்டி இருக்கிறார்.

இதன் காரணமாக, இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்த நிலையில், இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டில் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்திற்குப் பிறகு, அய்யாசாமி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கடுமையாகத் துன்புறுத்தி உள்ளார். 

குறிப்பாக, அவர்கள் இருவரும் சென்னை வந்த பிறகு, அய்யாசாமி தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் மோசடி செய்து, அந்த பெண்ணை 2 வது திருமணம் செய்துகொண்டதும் தெரிய வந்தது. இந்த மோசடி கல்யாணம் நடைபெற அய்யாசாமியின் குடும்பத்தினரும் உடந்தையாக இருந்து உள்ளனர். அவரை விட்டு விலக முயன்ற லண்டன் வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணை, கணவன் என்ற பெயரில் அய்யாசாமி போதை மருந்து கொடுத்து, ஆடை இல்லாமல் வீடியோவை எடுத்து, இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி அப்பெண்ணை மிரட்டி உள்ளார். 

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த லண்டன் வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண், இது குறித்து காவல் துறையிடம் புகார் அளித்தார். ஆனால், போலீசார் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

தற்போது, நீதிமன்ற உத்தரவின் படி, அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் விசாரிப்பதற்குப் பதிலாக, குற்றப்பிரிவு காவலர்கள் மோசடி வழக்கை மட்டும் பதிவு செய்து விசாரணை செய்து உள்ளனர். இந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் கிடப்பில் போட்டதால், பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். 

இதன் காரணமாக, 3 ஆண்டுகள் கழித்து அவசர அவசரமாகக் குற்றப்பத்திரிக்கையை அடையாறு காவல் நிலைய காவலர்கள் தற்போது தாக்கல் செய்து உள்ளனர். இது குறித்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்த பெண் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், தான் பாலியல் ரீதியாகக் கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக வீடியோ ஆதாரங்களுடன் சமர்ப்பித்தார். 

இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், மீண்டும் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறை விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், வழக்கை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் தற்போது விசாரணையைத் தொடங்கி உள்ளனர் என்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் பாட்ஷா தெரிவித்து உள்ளார்.