சென்னை சூளைமேடு பகுதியில் பதிவு திருமணம் செய்த காதலர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக காதல் மனைவியின் நம்பரை காதலன் பிளாக் செய்ததால், மனமுடைந்த காதலி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை சூளைமேடு அண்ணாசாமி தெருவைச் சேர்ந்த இளம் பெண் காயத்ரி, அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்ற இளைஞரை காதலித்து வந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், இந்த காதல் கதை இருவர் வீட்டிற்கும் தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த இரு வீட்டார் பெற்றோரும் காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது, இளம் பெண் காயத்ரி, தனது பெற்றோரை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், அவர்கள் கொஞ்சம் விடாப்பிடியாக இருந்தனர். அதே போல், காதலன் வினோத், தனது பெற்றோரை சமாதானம் செய்ய முடியாமல் தவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு காதலன் வினோத் - காதலி காயத்ரியை பதிவு திருமணம் செய்து கொண்டார். ஆனால், இது பற்றி தனது பெற்றோரிடம் எதுவும் கூறாமல் வினோத் அமைதியாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, இளம் பெண் காயத்ரி பெற்றோர் மட்டும் சம்மதம் தெரிவித்த நிலையில், பெண் வீட்டார் சம்மதத்துடன் மட்டும், கடந்த ஜனவரி மாதம் காதலன் வினோத், தன் காதல் மனைவி காயத்ரியை மீண்டும் முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

இதனையடுத்து, மணமக்கள் இருவரையும் பெண் வீட்டார் சென்னை சூளைமேடு அண்ணாசாமி தெருவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொடுத்தனர். அந்த வீட்டில் புதுமண தம்பதிகள் இருவரும் வசித்து வந்தனர். அந்த வீட்டில், கணவன் - மனைவி இருவரும் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர்.

மேலும், காதலி காயத்ரியை திருமணம் செய்ததைக் காதல் கணவன் வினோத், தனது வீட்டில் கடைசி வரை தெரிவிக்காமல் இருந்து வந்து உள்ளார். இது தொடர்பாக காயத்ரி கேட்ட போது, அடிக்கடி அவர்களுக்குள் சண்டை வந்துகொண்டே இருந்ததாகக் கூறப்படுகிறது. 

அத்துடன், தலை தீபாவளிக்கு காயத்ரியின் வீட்டிற்கு வர வினோத் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டைப் போட்டுக்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதில், கடும் ஆத்திரமடைந்த வினோத், தன் காதல் மனைவி காயத்ரியின் செல்போன் எண்ணை பிளாக் செய்து வைத்து உள்ளார். இதனால், காயத்ரியால் தன் கணவனைத் தொடர்பு கொண்டு பேச முடியாமல் தவித்து வந்தார். இதன் காரணமாக கடும் மனமுடைந்த மனைவி காயத்ரி, தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய வினோத், தன் மனைவி தூக்கில் தொங்கிக்கொண்டு இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார். இதனையடுத்து, தனது மாமியாருக்கு அவர் தொலைப்பேசியில் தகவல் தெரிவித்து உள்ளார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த காயத்ரியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயத்ரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், “மனைவி காயத்ரியின் செல்போன் எண்ணை கணவன் வினோத் பிளாக் செய்ததால், மனமுடைந்த மனைவி காயத்ரி தற்கொலை செய்து கொண்டது” முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.