“விஜய் ரீல் ஹீரோவா? ரியல் ஹீரோவா? என்பதெல்லாம் நீதிபதிக்குத் தேவையில்லாதது என்றும், இந்த விவகாரத்தில் சமூக நீதியெல்லாம் எங்கு வந்தது” என்றும், முன்னாள் நீதிபதி சந்துரு சரமாரியாகக் கேள்வி எழுப்பி நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். 

தமிழ்நாட்டில் புதிய ஹாட் டாப்பிக்கா மாறியிருக்கிறார் நடிகர் விஜய். அதற்குக் காரணம், தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சுங்கவரி செலுத்திய நிலையில், நுழைவு வரி வசூலிக்கத் தடை கோரியிருந்த நடிகர் விஜய்யின் மனு மீதான விசாரணையின் போது நீதிபதி எம்.எஸ் சுப்ரமணியம் கூறிய கருத்துகள் தான், தற்போது புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ் சுப்ரமணியம், “நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. சமூக நீதிக்குப் பாடுபடுவதாகப் பிரதிபலிக்கும் நடிகர்கள், வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது” என்று கூறியிருந்தார்.

நடிகர் விஜய் பற்றிய நீதிபதியின் இந்தக் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

அதாவது, “இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் வரி குறைப்பு கேட்டு  முறையிடுவது அவர்களது உரிமை. அவர்களை நடிகர் என்று பார்ப்பது தவறு” என்று, விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார் கார்த்தி சிதம்பரம். 

அதே போல், முன்னாள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்பும், விஜய்க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் தான், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி கே.சந்துருவும், இது தொடர்பாக கருத்து கூறியுள்ளார்.

அதன் படி, “தொடக்கத்தில், பாண்டிச்சேரியில் இருந்து வாங்கும் வாகனங்களுக்காகத் தான் நுழைவு வரிச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அங்கு, 4 சதவீத குறைந்த விற்பனை வரியும், தமிழகத்தில் 13 சதவீதமும் விற்பனை வரி இருக்கிறது. அந்த 9 சதவீத வரியை மிச்சப்படுத்த பாண்டிச்சேரியில் போய் வாகனங்களை வாங்குகிறார்கள். நானும் முதன் முதலாக வழக்கறிஞர் ஆனபோது 1977 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் தான் 5022 ரூபாய்க்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கினேன். 

எனக்கு, 500 ரூபாய் மிச்சம் ஆனது. பணம் மிச்சப்படுவதால் பாண்டிச்சேரியில் வாங்கலாமே என்று மக்கள் வாங்குகிறார்கள். அந்த மாதிரியாக பாண்டிச்சேரியிலேயே அதிக அளவில் வாகனங்கள் வங்குவது தமிழகத்திற்கு வரி நஷ்டம் எற்படுகிறது என்று, புதிதாக நுழைவு வரி சட்டம் கொண்டு வந்தார்கள்.

இந்திய அரசியல் சட்டத்தின் 304 வது பிரிவு இந்தியா முழுக்க யார், எங்கும் செல்லலாம். அதற்கு, எந்தத்தடையும் இருக்கக்கூடாது என்கிறது. ஆனால், இந்த மாதிரி வாகனங்களுக்கு நுழைவு வரி போடும் போது மட்டும், இது போன்ற சட்டம் செல்லுமா? செல்லாதா? என்ற பிரச்சனை எழுந்துவிடுகிறது” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

“4 சதவீத வரிக்கும் 13 சதவீத வரிக்கும் உள்ள வித்தியாசம் கிட்டத்தட்ட 9 சதவீதம் வருகிறது. அதனால், அதில் தவறில்லை. வரியை ஏய்க்க வாகனங்களை வாங்கி வருபவர்களிடம் வரி வாங்கலாம் என்றார்கள். ஆனால், நடிகர் விஜய் பாண்டிச்சேரியில் கார் வாங்கவில்லை. இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்து சுங்கவரிக் கட்டிய பிறகே, ஹார்பரிலிருந்து காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்திருக்கிறார்” என்று, சுட்டிக்காட்டி உள்ளார். 

இதில், “பதிவு செய்யச்செல்லும் போது, கூடுதலாக நுழைவு வரி கேட்கிறார்கள் என்றும், கப்பல் வழியாக வரும் வண்டிகளுக்கு நுழைவு வரி உண்டா?” என்றும், அவர் கேள்வி எழுப்பி உள்ளார். 

“ஏற்கனவே, நான் சுங்கவரி கட்டியதால் என்னால் நுழைவு வரி செலுத்த முடியாது என்று அவர் கேட்கிறார்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார். 

“இது விஜயின் உரிமை. பக்கத்து மாநிலத்தில் இருந்து குறைந்த விற்பனை வரியை ஏமாற்றக்கூடாது என்பதால், ஏமாற்றுவதற்கு போடும் வித்தியாசம்தான் நுழைவு வரி இது. ஆனால், விஜய் வெளி நாட்டில் இருந்து காரை இறக்குமதி செய்து உள்ளார். அவர் யாரையும் ஏமாற்றவில்லையே?” என்றும் முன்னாள் நீதிபதி கே.சந்துரு விளக்கம் அளித்திருக்கிறார்.

அத்துடன், நடிவர் விஜயக்கு இது தொடர்பாக கேட்க உரிமை இருக்கிறது என்றும், அவரின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், தள்ளுபடி செய்யப்போகிறீர்கள். அவர், கட்டப்போகிறார். ஆனால், இந்த மாதிரி ஸ்டேட்மெண்ட் எல்லாம் கொடுப்பது அநாவசியம்” என்றும், முன்னாள் நீதிபதி கே.சந்துரு தனது தரப்பு கருத்தை தெரிவித்து உள்ளார்.
    
குறிப்பாக, “வரி ஏய்ப்பு செய்வதற்கும், வரியை திட்டமிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்றும், இதுபோன்று வரியை திட்டமிடுவதைத் தான் பலரும் செய்கிறார்கள்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“வரியில் இருந்து விதிவிலக்கு கேட்பது இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் உரிமை என்றும், இந்தியாவில் பெரிய பெரிய பணக்காரர்கள் பலர் வரிவிலக்கு கேட்டிருக்கிறார்கள் என்றும், அப்படி கேட்டுக் கிடைத்தால் சந்தோஷப்படப் போகிறார்கள் என்றும், இல்லையென்றால் அந்த வரியை கட்டப்போகிறார்கள்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார். 

முக்கியமாக, “ரீல் ஹீரோ என்று உள்நோக்கம் கற்பிக்க என்ன நோக்கம் இருக்கிறது?“ கேள்வி எழுப்பிய உள்ள அவர், “ரீல் ஹீரோவா? இல்லை ரியல் ஹீரோவா? என்பதெல்லாம் தேவையில்லாத விஷயம்” என்றும் சுட்டிக்காட்டி உள்ளார். 

மிக முக்கியமாக, “இதில், எங்கு சமூக நீதி வந்தது? வரி சட்டங்களைப் பொறுத்தவரை நீதிபதிகள் கண்டிப்பாக இருப்பது சரியானது தான். ஆனால், அது வரி வசூலுக்கு மட்டும் தான் இருக்க வேண்டும். அதற்கு, ஏன் விஜய்யயை விமர்சிக்க வேண்டும்?” என்றும், முன்னாள் நீதிபதி சந்துரு கேள்வி எழுப்பி உள்ளார்.

இதனிடையே, நடிகர் விஜய்க்கு சீமான் ஆதரவு தெரிவித்து உள்ளாது குறிப்பிடத்தக்கது.