சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்க்க வாட்ஸ்ஆப் குழு வைத்திருந்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர். 

இந்த கொரோனா காலத்தில் நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தொடர்ச்சியாகச் செய்திகள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. அதற்கு மேலும் ஒரு சாட்சியாக அமைந்திருக்கிறது சென்னையில் நடைபெற்ற இந்த சம்பவம்.

சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி சிறுமியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடையாளம் தெரியாத ஒரு நபர், ஆபாச வீடியோ ஒன்றை அனுப்பி வைத்து உள்ளார்.

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த சிறுமி, இது பற்றி தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனைப் பார்த்த சிறுமியின் பெற்றோர், சென்னை மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பியது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, ஆபாச விடியோ அனுப்பிய ஐ.பி. முகவரியை வைத்து, சென்னை கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் தான், அந்த வீடியோவை அனுப்பியது என்பதை போலீசார் கண்டு பிடித்தனர். இதனையடுத்து, மகேந்திரனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும், மகேந்திரன் செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில், அவரது செல்போனில் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் மோசமாக சித்தரிக்கக்கூடிய ஏராளமான படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பது தெரிய வந்தது.

அத்துடன், இதற்கென்று ஒரு வாட்ஸ்ஆப் குழுவை உருவாக்கி அதில் குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து வந்துள்ளதையும் போலீசார் கண்டுபிடித்து, கடும் அதிர்ச்சியடைந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, வாட்ஸ்ஆப் குழுவில் உள்ள அனைவரையும் கைது செய்ய தற்போது போலீசார் தனிப்படை அமைத்து உத்தரவிட்டு உள்ளனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன், திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.
 
கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் போக்சோ சட்டம், தகவல் தொழில் சுட்ப சட்டத்தின் 4 பிரிவுகள் என்று மொத்தம் இதுவரை 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். அத்துடன், அந்த வாட்ஸ்ஆப் குழுவில் உள்ள மற்றவர்களையும் கைது செய்யும் முனைப்பில் போலீசார் தற்போது தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்பில் இருப்பவர்கள் வேறு யாரேனும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்களா என்றும், இது போன்று வேறு ஏதேனும் வாட்ஸ்ஆப் குழுக்கள் உள்ளனவா என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே, சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்க்க வாட்ஸ்ஆப் குழு தனியாக வைத்திருந்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ள சம்பவம், சென்னையில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஆன்லைனில் பாடம் படிக்கும் தங்களது குழந்தைகளை அவர்களது பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், போலீசார் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.