இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் பொருளாதார இழப்புகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதால், ஊரடங்கு தளர்வுகளும் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டு வருகின்றது.

தளர்வின் ஒருபகுதியாக, கொரோனா பரவலின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சென்னை புறநகர் ரயில் சேவை பற்றிய அறிவிப்பொன்று சில தினங்களுக்கு முன் வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின்படி, `தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் சென்னையில் அக்டோபர் 5ம் தேதியில் இருந்து புறநகர் ரயில் சேவை துவங்கும்' என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
இருப்பினும், அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே இந்த சேவை இயங்கும் என்று அரசு தரப்பு அறிவித்துள்ளது. எந்தெந்த ரயில் சேவைகள் இயங்கும் என்பது, ரயில் நிலையங்களில் காட்சிப்படுத்தப்படும் என்றும் அறிவிப்பில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால் நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு வழக்கமான வாகன போக்குவரத்து சேவைகள் தொடங்கியுள்ளது. மேலும் தமிழகத்தில் பஸ் போக்குவரத்து சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், பொது மக்களுக்காக மின்சார ரெயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

ஊரடங்கு காலத்தில் கொரோனா முன்களப்பணியாளர்களுக்காக தெற்கு ரெயில்வே சார்பில் கடற்கரை-செங்கல்பட்டு, வேளச்சேரி, மூர்மார்க்கெட்-அரக்கோணம், கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் 28 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசிய அரசு பணியாளர்களுக்கும் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த மின்சார ரெயிலில் அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கூடுதலாக 10 மின்சார ரெயில்கள் இன்று முதல் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் 38 மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரெயில்களில் பொது மக்களுக்கு அனுமதி கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஆறு மாத காலமாக மின்சார ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளன. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மின்சார ரயில்களை நம்பி சிறு சிறு வியாபாரம் செய்பவர்களும் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டாலும் அதிகளவிலான கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஏழை, நடுத்தர மக்கள் பெரும்பாலும் மின்சார ரயில்களையே தேர்வு செய்துவந்தனர். இந்நிலையில் மீண்டும் இந்த மின்சார ரயில் சேவை எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்தது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மும்பையில் அத்தியாவசியப் பணிகளுக்காக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மின்சார ரயில் சேவை அக்டோபர் 5ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அனைவருக்கும் இந்த அறிவிப்பு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய அரசுப் பணிகளில் ஈடுபடுவோருக்காக இந்த புறநகர் ரயில்கள் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் ஆகிய நிலையங்களிலிருந்து இயக்கப்படுகின்றன.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இந்த ரயில் சேவையை தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

“தனியார் துறையில் பணிபுரிபவர்கள் அவரவர் பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள அட்டையுடன் வருபவர்களுக்கு மட்டும் புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்ய, பயண சீட்டு வழங்க மத்திய ரயில்வேதுறை அனுமதி வழங்க வேண்டும். அதற்கு தமிழக அரசு சிறப்பு அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெற்று தரவேண்டும்.

இதனால், அரசு பேருந்தில் பயணம் செய்பவர்களின் நெருக்கடி குறையவும், நோய் தொற்று பரவாமல் தடுக்கவும் வழிவகுக்கும். மக்களும் குறித்த நேரத்தில் பணிக்கு சென்று வர ஏதுவாக இருக்கும். ஆகவே, தமிழக அரசு உடனடியாக இவற்றை கவனத்தில் கொண்டு மக்கள் நலன் கருதி சென்னை புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்ய மேலும் தளர்வுகளை மத்திய அரசிடம் இருந்து பெற்று தருமாறு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.