வரதட்சணையாக பத்து லட்சம் ரூபாய் தராத ஆத்திரத்தில் தன் மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை, கணவனே ஃபேஸ்புக்கில் பதிவிட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அயனாவரம் பழனியப்பா தெரு பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான அமுதா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கு, கடந்த 2010 ஆம் ஆண்டு சார்லஸ் என்பவருடன் திருமணம் ஆகி உள்ளது. திருமணத்திற்குப் பிறகு, கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர்கள் இருவரும் முறைப்படி விவகாரத்து பெற்றுப் பிரிந்து சென்று விட்டனர். இதன் காரணமாக, அமுதா தனியாகவே வாழ்ந்து வந்தார். 

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2015 ஆம் ஆண்டு திருவொற்றியூரைச் சேர்ந்த விஜயபாரதி என்பவருடன் அமுதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறி உள்ளது. இத்தனை ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்கள் இருவரும், கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு, அமுதா - விஜயபாரதி இருவரும், சென்னை அயனாவரம் பகுதியில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். எனினும், திருமணத்திற்குப் பிறகு, கணவன் விஜயபாரதி அடிக்கடி பத்து லட்சம் ரூபாய் பணம் கேட்டு மனைவி அமுதாவிடம் தகராறு செய்ததாகத் தெரிகிறது. ஒரு கட்டத்திற்குப் பிறகு, மனைவி அமுதாவை அவன் துன்புறுத்தத் தொடங்கி உள்ளான்.

மேலும், உச்சக்கட்ட கொடுமையாக, கடந்த ஜூலை மாதம் “நீ 10 லட்சம் ரூபாய் வரதட்சணை தரவில்லை என்றால், உன் அந்தரங்க புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவேன்” என்றும், அவன் மிரட்டத் தொடங்கி உள்ளான்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி அமுதா, “நான் உன்னோட மனைவி டா. உன்னை நம்பி தானே கல்யாணம் செஞ்சேன்” உன்னை நம்பி வந்த எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேண்டும்” என்று கணவனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனால், கணவன் - மனைவி இடையே சண்டை வந்துள்ளது.

கணவன் விஜயபாரதியுடன் சண்டை போட்டுக்கொண்டு வில்லிவாக்கத்தில் உள்ள தனது அம்மா வீட்டுக்கு அமுதா சென்று விட்டார். மனைவி சண்டை போட்டுக் கொண்டு சென்றதைக் கூட பெரிய விஷயமாகக் கருதாமல், மீண்டும் தொலைப்பேசி மூலம் மனைவியிடம் பணம் கேட்டுத் தொடர்ந்து கணவன் விஜயபாரதி டார்ச்சர் செய்து வந்துள்ளான்.

ஆனால், மனைவியோ கணவன் மிரட்டலைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அலட்சியமாக இருந்துள்ளார். கணவன் தொடர்ந்து போன் செய்து டார்ச்சர் செய்யவே, “உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள்” என்று கூறி உள்ளார். 

மனைவியிடம் இருந்து இந்த பதிலைச் சற்றும் எதிர்பார்க்காத கணவன் விஜயபாரதி, ஆத்திரத்தில் மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அவர் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அதே நேரத்தில் கணவனின் இந்த செயலால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் மனைவி தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், கணவன் விஜயபாரதியை தேடி வந்தனர். 

மேலும், விஜயபாரதியை தொடர்புகொண்டு விசாரணைக்குக் காவல் நிலையத்திற்கு வரும்படி போலீசார் பலமுறை அழைத்த போது, “நான் வெளியூரில் இருக்கிறேன்” என்று தொடர்ந்து கூறி வந்துள்ளார். அத்துடன், அவர் சென்னையில் இருப்பதை உறுதி செய்துகொண்ட போலீசார், விரைந்து சென்று அவரை கையும் களவுமாகப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதும், இதன் காரணமாகவே ஃபேஸ்புக்கில் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டதும் உறுதிப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, 5 பிரிவுகளின் கீழ் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.