கொரோனா விதிமீறல் மூலம் சென்னையில் 3 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா என்னும் பெருந் தொற்று வைரஸ் பரவத் தொடங்கியதும், தொடக்கம் முதலே மிக கடுமையான விதிமுறைகள் பின் பற்றப்பட்டு வந்தன. அதன் படி, முககவசம் அணியாதவர்கள் மற்றும் தேவையின்றி வாகனத்தில் சாலைகளில் சுற்றித் திரிந்தவர்கள் என்று பலரிடமும் போலீசார் அபராதம் வசூலித்து வந்தனர். இதனால், வசூலிக்கப்பட்ட அபராத தொகை நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்துகொண்டே வந்தது. இது தொடர்பாக போலீசார் நாள் தோறும் பட்டியல் ஒன்றையும் தொடர்ந்து வெளியிட்டு வந்தனர்.

ஆனால், தற்போது ஊரடங்கில் பல தளர்வுகள் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளதால், போலீசார் வெளியிட்ட பட்டியல் நிறுத்தப்பட்டது.

மேலும், சென்னையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளைச் சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிகளான முககவசத்தை அணியாதது, தனி நபர் இடைவெளியை கடைப்பிடிக்காதது மற்றும் வணிக நிறுவனங்களில் ஏ.சி. பயன்பாட்டைத் தவிர்ப்பது போன்றவை முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பான பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் சற்று கடுமையாக நடந்துகொண்டதாகவும் கூறப்பட்டது.

அதன் படி, சென்னையில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதில், சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் இன்று வரை 3.8 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

குறிப்பாக, இந்த அபராத தொகையில், அதிக பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 51.82 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது. 

அதனைத் தொடர்ந்து, மாதவரத்தில் 30.37 லட்சம் ரூபாயும், கோடம்பாக்கத்தில் 26.92 லட்சம் ரூபாயும் வசூலிக்கப்பட்டு உள்ளது. 

சென்னையில் மிக குறைந்த பட்சமாக சோழிங்கநல்லூரில் 5.30 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

மேலும், சென்னையில் முககவசம் அணியாதவர்களிடம் இருந்து மட்டும் இதுவரை 13.24 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகப் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

அதே போல், இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 92.49 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,674 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85,07,754 ஆக உயர்ந்து உள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 49,083 பேர் ஆக அதிகரித்து உள்ளது. இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 78,68,968 ஆக உயர்ந்து உள்ளது. இதன் மூலம்  குணமடைந்தோர் விகிதம் 92.49 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.