சென்னையில் கல்லூரி மாணவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வண்டலூர் அருகே உள்ள வேங்கட மங்கலத்தைச் சேர்ந்த முகேஷ், பாலிடெக்னிக் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். 

Gun shot

இந்நிலையில், அதே பகுதியில் உள்ள தனது நண்பர் விஜய் என்பவரது வீட்டிற்கு முகேஷ் சென்றுள்ளார். அங்கே, வீட்டிற்கு வெளியே விஜயின் அண்ணன் உதயா இருந்த நிலையில், வீட்டின் உள்ளே விஜய் மற்றும் முகேஷ் இருந்துள்ளனர்.

அப்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில், திடீரென்று வீட்டிற்குள் துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. அதே நேரத்தில், வீட்டிற்குள் இருந்த விஜய், வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.

இதனால், பதறிப்போன வீட்டின் வெளியே இருந்த விஜயின் அண்ணன் உதயா, உள்ளே சென்று பார்த்தபோது, முகேஷ் நெற்றியில் குண்டடிபட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்துள்ளார். இதனையடுத்து, அவர் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, முகேஷை மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது, வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Gun shot

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள விஜயை தேடி வருகின்றனர். இதனிடையே, சென்னையிலும் மாணவர்கள் மத்தியில் துப்பாக்கி கலாச்சாரம் வந்துள்ளதா என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.