வடிவேலு காமெடி பாணியில், பேருந்து முன்பக்க கண்ணாடியை‌ உடைத்துக் கொண்டு நடத்துநர் ஒருவர் வெளியே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நடிகர் வடிவேலு, நகைச்சுவையாக நடித்திருந்த ஒரு திரைப்படத்தில், “பேருந்தின் முன்பக்க கண்ணாடியை‌ உடைத்துக் கொண்டு வெளியே விழுவார்” தற்போது, அதே பாணியில் நிஜத்திலும் அப்படி ஒரு சம்பவம் சென்னை அருகே நடந்துள்ளது.

சென்னை ஆவடி அருகே உள்ள காமராஜர் நகரில் மினி பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது. அப்போது, சாலையின் குறுக்கே ஒரு சிறு குழந்தை திடீரென்று ஓடி வந்துள்ளது. அதை சட்டென்று கவனித்த பேருந்தின் ஓட்டுநர் சேகர், வண்டியை உடனடியாக சடேன் பிரேக் அடுத்து உள்ளார். இதில், மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்து, சடேன் பிரேக் போட்ட வேகத்தில் திடீரென்று அப்படியே நின்றுள்ளது.

அப்போது, அந்த பேருந்தில் எந்த பிடிமானத்தையும் பிடித்துக்கொள்ளாமல் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த நடத்துநர் ஆறுமுகம், அப்படியே நிலை தடுமாறி பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு, அப்படியே வெளியே வந்து விழுந்தார். இதனையடுத்து, பேருந்தில் இருந்த சக பணிகள் மற்றும் அந்த வழியாக சென்றுகொண்டிருந்த பொது மக்கள் என அனைவரும் ஓடி வந்து, பேருந்தின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்த நடத்துநரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல், மதுரையில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 க்கும் மேற்பட்ட வாகனங்களை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை தத்தனேரி மின்மயானப் பகுதியை ஒட்டி உள்ள பாக்கியநாதபுரம் பகுதியில் உள்ள சாலையில் மினி லாரி, வேன், ஆட்டோ உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள், அந்த வாகனத்தின் முன் பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கி முற்றிலும் சேதப்படுத்திவிட்டு, அங்கு கடும் ரகளையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த சிலர், இவர்களைத் தடுக்க வந்துள்ளனர். ஆனால், அவர்களிடமும் அவர்கள் சண்டைக்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து, அங்கு நின்றிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு போலீசார், விரைந்து வந்துள்ளனர். ஆனால், அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து, அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அவற்றை அதரமாகக் கொண்டு, வழக்குப் பதிவு செய்து, அந்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.