நீட் தேர்வு என்ற பெயரில், மாணவிகளின் தலைமுடியை கூட ஆராய்ந்த அதிகாரிகள், 4 நிமிடம் தாமதமாக வந்த மாணவரைத் தேர்வுக் கூடத்திற்குள் அனுமதிக்காமல் இறக்கமற்று நடந்துகொண்ட சம்பவம், கூடியிருந்த சக பெற்றோர்களையும் தேர்வுக் கூடத்தை முற்றுகையிட வைத்து, அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட வைத்து உள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் பிற்பகலில் தொடங்கி தற்போது நடைபெற்று முடிந்துள்ளன. பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய இந்த தேர்வு மாலை 5 மணி வரை நடைபெற்றது. 

தமிழகத்தில் மொத்தம் 18 நகரங்களில் உள்ள 24 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

நீட் தேர்வினை, தமிழகத்தில் மட்டும் 1.10 லட்சம் பேர் தேர்வு எழுதினர். வழக்கமான தேர்வு விதிமுறைகளோடு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இணைந்து தேர்வு நடத்தப்பட்டது. 

அத்துடன் தமிழ், மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகள் முதன் முறையாகச் சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் இந்த முறை நீட் தேர்வுகள் நடைபெற்றது. 
இதில், புதுச்சேரியில் 14 மையங்களில் 7,123  மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இப்படியாக, நாடு முழுவதும் 3,862 மையங்களில் 16.10 லட்சம் பேர் இன்றைய தினம் நீட் தேர்வினை எழுதி உள்ளனர்.

இந்த நிலையில் தான், நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பாக, நீட் தேர்வு என்ற பெயரில் தேர்வு நடத்தும் அதிகாரிகள் சிலர், தேர்வு எழுத வரும் மாணவ - மாணவிகளிடம் வரம்பு மீறி இறக்கமற்ற முறையில் நடந்துகொண்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதன் படி சென்னை மயிலாப்பூரில் உள்ள பிஎஸ் சீனியர் செகன்ட்ரி கௌரி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு வந்த “மாணவிகள் அனைவரும் தங்கள் கழுத்தில் அணிந்திருந்த நகைகளையும், காதில் அணிந்த கம்மலையும், ரப்பர் பேண்ட் போன்ற பொருட்களையும் அகற்ற வேண்டும்” என அதிகாரிகள் கட்டளையிட்டனர்.

அப்போது, மாணவி ஒருவரின் தலையில் ரப்பர் பேண்டில் உலோகம் கலந்த இருந்ததால் அதனை அவரது தந்தை, சக மாணவர்களின் பெற்றோர்களுக்கு மத்தியில் தனது பல்லால் கடித்து அகற்றினார். இது, காண்போரைக் கண் கலங்கச் செய்தது.

அதே போல், மயிலாப்பூரிலுள்ள பிஎஸ் சீனியர் செகன்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் 480 மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மதியம் 2 மணிக்கு நடைபெறும் நீட் தேர்விற்காக மாணவர்கள் காலை 11 மணி முதல் தேர்வு மையத்திற்குள் பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

அதன் படி, மதியம் சரியாக 1.30 மணி அளவில் தேர்வு மையத்தின் கதவு மூடப்பட்டது. அப்போது, மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் மாணவர் மெய்யழகன் என்ற இளைஞன் வெறும் 4 நிமிடங்கள் தாமதமாக 1.34 மணிக்கு தேர்வு மையத்திற்கு வந்து உள்ளார். ஆனால், தேர்வு நடத்தும் அந்த அதிகாரிகள் அந்த மாணவனை தேர்வு எழுத உள்ளே அனுமதிக்கவில்லை. 

இதனையடுத்து, நீட் தேர்வு நடத்தும் அதிகாரிகளைப் பார்த்து கொந்தளித்து எழுந்த அங்கு கூடியிருந்த சக மாணவர்களின் பெற்றோர்கள், “மாணவர் மெய்யழகனை உள்ளே அனுமதிக்க வேண்டும்” என்று, தேர்வு நடத்தும் அதிகாரிகளிடம் முற்றுகையிட்டு வலியுறுத்தினார்கள்.

இருப்பினும் தேர்வு மையத்தின் அலுவலர் நேரம் கடந்துவிட்டதால் மாணவரை உள்ளே அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் நிராகரித்தார். இதனால், அந்த மாணவர் மனம் உடைந்து வீட்டிற்கு திரும்பிச் சென்றார்.

வெறும் 4 நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவரை தேர்வு எழுத அனுமதிக்காமல் அதிகாரிகள் இறக்கமற்று திருப்பி அனுப்பியது, அங்கிருந்த பெற்றோரை மட்டுமின்றி பலரையும் கடும் அதிர்ச்சிக்கும் கொந்தளிப்புக்கும் உள்ளாக்கியது.

அதே போல், மத்திய அரசின் அறிவிப்பின்படி இன்று நடைபெற்ற நீட் தேர்வில் பலத்த கெடுபிடிகள் கடைப்பிடிக்கப்பட்டன.

அதன் படி, மாணவர்களை சோதனைக்கு உட்படுத்துகிறோம் என்கிற பெயரில், மாணவிகளின் தலை முதல் கால் வரை மெட்டல் டிடெக்டர் வைத்து அதிகாரிகள் சோதித்தனர்.

இதனைப் பார்த்துப் பெற்றோர்கள், “மாணவர்கள் பிட் எழுதிச் சென்றால் பேப்பரை தானே கொண்டு போவார்கள். அதற்கு ஏன் இப்படி மெட்டல் டிரெக்டர் எல்லாம் 
வைத்து அதிகாரிகள் சம்மந்தமே இல்லாமல் சோதனை நடத்த வேண்டும்” என்று, பக்கத்தில் இருந்தவர்களிடம் கமெண்ட் அடித்துப் பேசிக்கொண்டும், விமர்சனமும் செய்து வந்தனர். 

குறிப்பாக, சக மாணவிகளை அதிகபட்ச கொடுமையாக அவர்களின் தலைவாரி பின்னலிட்ட மாணவிகள் சடைகளை எல்லாம் அவிழ்த்து, அவற்றைச் சோதித்துப் பார்த்தனர். 

தேர்வு எழுத வந்த மாணவிகள் தலைவிரி கோலமாக வரிசையில் நின்றிருந்த மாணவிகளைப் பெற்றோர் சோகமாகவும், பரிதாபமாகவும் பார்த்துக் கொண்டிருந்தனர். 
நீட் தேர்வு நடத்துகிறோம் என்ற பெயரில், தங்களது பிள்ளைகளை இப்படியாக அதிகாரிகள் நடத்தியதை, அவர்களது பெற்றோர்கள் மிகுந்த வேதனையாகவும், கடும் அவதியோடும் பார்த்துக்கொண்டிருந்தது காண்போரைக் கண்கலங்கச் செய்தது.

மேலும், தலையில் பின்னலிட்ட மாணவிகள் சடைமுடி எல்லாம் சோதித்துப் பார்த்த பிறகு, தேர்வு நடத்தும் அலுவலர்கள் மாணவிகளுக்குத் தலைவாரி சடை பின்னி விட்ட நிகழ்வுகளும் ஓரிசில இடத்தில் நடந்தது. 

இப்படியாக, நீட் தேர்வு என்கின்ற பெயரில் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் அதகளம் நடந்திருப்பது, ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.