வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 6 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25-ந்தேதி தொடங்கியது. இதன் காரணமாக டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது.

இதனால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வந்தது.  எதிர்பாராமல் பெய்த இந்த கனமழையில், சென்னை வெள்ளக்காடாக மாறியது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் கடந்த 4 நாட்களாக மிக பலத்த மழை பெய்து வருகிறது.
   
இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வங்கக்கடலின் தென்கிழக்கில் நேற்று மதியம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியது.  அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இன்று காலை 8.30 மணியளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் மையம் கொண்டிருந்தது.

chennai rain

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை தெரிவித்திருந்த தகவலின்படி, தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கூறியிருந்தது. 

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தமிழக கடற்கரை பகுதியை நாளை காலை 11 மணி அளவில் நெருங்கும். அதனை தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா, வட தமிழகம் - புதுச்சேரி கடற்கரையை காரைக்காலுக்கும் - ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் கடலூருக்கு அருகில் நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடக்கக்கூடும். 

இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் 11ஆம் தேதி காலை முதல் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

chennai rain 21

தற்போது இந்திய வானிலை மையம் தகவல் ஒன்றை அளித்துள்ளது. அதன்படி, இன்னும் ஆறு மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள தகவலின்படி, "தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து, நாளை (நவம்பர் 11-ம் தேதி) காலை வட தமிழக கடற்கரையை வந்தடையும். இதற்குப் பிறகு ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் காரைக்காலுக்கும் இடையே, கடலூருக்கு அருகே நாளை மாலை கரையை கடக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.