தற்போது பெய்து வரும் கனமழையை தகுந்த முன்னேற்பாடுகளுடன் மக்கள் எதிர்கொண்டால், பாதுகாப்பாக வடகிழக்கு பருவமழையை கடக்கலாம் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 25-ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்கிழக்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடந்த 3 தினங்களுக்கு முன்னர் உருவானது.

இதனால், டெல்டா உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. ஆனால் சென்னை மாநகரத்திற்கு எந்த முன்னறிப்பு எதும் சென்னை வானிலை மைம் கொடுக்கவில்லை. இந்தநிலையில் கணிப்பை தாண்டி, கடந்த சனிக்கிழமை இரவு சென்னையில் துவங்கிய கனமழை, 13 மணி நேரம் இடைவிடாமல் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை நீடித்தது.

எதிர்பாராதவிதமாக ஒரேநாளில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக பெய்த கனமழையால், சென்னையில் அசோக் நகர், வேளச்சேரி, கொளத்தூர் உள்ளிட்ட தென்சென்னை, வடசென்னை பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் மக்கள் குடிநீர், மின்சாரம் இன்றி அவதியுற்று வருகின்றனர். 

r1

2015-ல் வெள்ளம் சூழ்ந்தது போன்ற ஒருநிலை ஏற்பட்டுள்ளதோ என்று மக்கள் அச்சம் கொள்ளும் வகையில் தற்போது மழை பெய்து வருகிறது. அதிலும் இன்று தென்கிழக்கு வங்க கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. மேலும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மழைநீர் தேங்கிய பகுதிகளில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதுடன், உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் தமிழக அரசால் வழங்கப்படுகின்றன.

இந்தநிலையில், சென்னை வானிலை ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குநர் ரமணன் ‘கலாட்டா’சேனலுக்கு எக்ஸ்க்ளூசிவாக பேட்டியளித்துள்ளார். அதில், ‘சென்னையில் திடீர் மழைக்கு காரணம், காற்று முறிவு கோடு, நமது கடல் எல்லையோரம் வந்ததே காரணம்.  அதிக மழை பொழிய காரணம் அரபிக்கடல் மற்றும் வங்கக் கடலில் காணப்பட்ட மேலடுக்கு சூழற்சிகளின் மேற்கு மற்றும் கிழக்கு திசை காற்று இணைவதனால், மழை மேகங்கள் உருவாகி மழை பொழிய காரணமாக அமைந்துள்ளன. 

r2

இவை எல்லாம் கணினி சார்ந்த கணிப்புகள் தான். கணினி சார்ந்த கணிப்புகளில் 100 சதவீதம் துல்லியமாக கணிக்க முடியாது. ஆனால் கணினி சார்ந்த கணிப்புகளை ஒட்டி தகுந்த முன்னேற்பாடுகளை செய்துகொண்டால், மக்கள் பாதுகாப்பாக வடகிழக்கு பருவ மழையை கடக்கலாம். தற்போது புயலுக்கான அறிகுறிகள் தென்படவில்லை.

பொதுவாக 21 மணிநேரத்திற்கு முன்னதாகவே புயல், காற்றழுத்த தாழ்வுப் பகுதி உள்ளிட்டவைகளை கணக்கிடலாம்.  தமிழகத்தில் தற்போது இயல்பை விட அதிகமான மழைப்பொழிவை எட்டவில்லை. 35 சென்டி மீட்டர் தான் பதிவாகியுள்ளது. இன்னும் 44 சென்டி மீட்டர் வரை மழை பெய்தால் தான், சராசரி மழைப்பொழிவு கிடைக்கும்.

காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், வரும் 10 மற்றும் 11-ஆம் தேதி அன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் அதிக மழை பொழிவு இருக்கலாம். அதனால் டெல்டா மற்றும் கடலோர பகுதிகளை சேர்ந்த மக்கள், அதிகினமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது அவசியம். 

வடகிழக்கு பருவமழையால், மேற்கு தொடர்ச்சி மலைகளை சேர்ந்த ஈரோடு, கோவை மற்றும் கடலோர மாவட்டங்கள் அதிகளவில் பயன்பெற்றுள்ளன. மழைநீர் தேங்காமல் செல்லும் அளவுக்கு, மழைநீர் வடிகால் இருந்தால், மக்கள் பயப்பட தேவையில்லை’ என்று ரமணன் தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குநர் ரமணன் வீடியோ பேட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.