ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக, இயக்குநர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நீலப்புலிகள் அமைப்பின் சார்பில் 2019 ஜூன் 5-ல்நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாறு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சையை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து ராஜராஜ சோழன் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி இயக்குநர் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதியப்பட்டது. 

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, இயக்குநர் பா. ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "2019 ஜூன் 5-ம் தேதி நீலப்புலிகள் அமைப்பின் சார்பாக, பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாற்று குறித்து உண்மைகள் சிலவற்றை குறிப்பிட்டேன்.

நிலமற்ற மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் ‘செந்தமிழ் நாட்டு சேரிகள்’ எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளவை குறித்தும் பேசினேன். பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகளும் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் கற்காலம் என குறிப்பிட்டுள்ளனர். தேவதாசி முறை அவரது ஆட்சிக் காலத்தில் அதிகளவில் இருந்துள்ளது.

p1

பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே நான் குறிப்பிட்டேன். இந்த தகவலை வேறு பலரும் பேசி உள்ளனர். ஆனால் என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைத்தளங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. நான் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. மேலும் எனது கருத்து, எந்த சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை. ஆகவே என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இது தொடர்பான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, பா.ரஞ்சித் மீதான வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையை, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன் தீர்ப்பை ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.