பிப்ரவரி 26-ம் தேதி புத்தகப்பை இல்லா தினம் கடைபிடிக்கப்படும் என்ற பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

school students

தமிழகத்தில் வரும் பிப் 26-ம்  தேதி புத்தகமில்லாத தினம் கடைபிடிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை நேற்று அறிவித்தது. 6  முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிப்ரவரி 26-ம் தேதி அன்று புத்தகம் இல்லாத தினம் கடைபிடிக்கப்படும் என்றும் மாடித் தோட்டம் மூலிகை தாவர வளர்ப்பு பாரம்பரிய கலைகள் குறித்த பயிற்சியும்,  அன்றைய நாளில் மாணவர்களுக்கு சிற்றுண்டி பரிசுகள் வழங்க ரூபாய் 1.2 கோடி நிதி ஒதுக்கியும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது.

மேலும் மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்கி , மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி   ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையான உடல் நலம் மற்றும் மனவளத்தினை மேம்படுத்தும்நோக்கத்துடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.  இதன்மூலம்  மாணவர்கள் தங்கள் தனித்திறன்களை முழு சுதந்திரத்துடன் வெளிப்படுத்தவும் , மன அழுத்தமில்லாத சூழ்நிலையில் அனுபவங்களின் மூலம் புதிதாக கற்றுக் கொள்வதற்கும் , உடல் , மனம் மற்றும் அறிவுசார் திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்பாக இது அமையும் எனவும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்தது.

அதனைத்தொடர்ந்து இந்நிலையில் பிப்ரவரி 26-ம் தேதி புத்தகப்பை இல்லா தினம் கடைபிடிக்கப்படும் என்ற பள்ளி கல்வித்துறை அறிவிப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.  கொரோனா தொற்று  காரணத்தினால் பள்ளிகள் தற்போதுதான் திறக்கப்பட்டு,  செயல்பட்டு வருவதால், மாணவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளை சரி செய்யவும் மற்றும், கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்தவும் வேண்டியுள்ளதால் , 26-ம் தேதி அன்று நடைபெற இருந்த செயல்பாடு ரத்து செய்யப்படுகிறது என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.