முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

corono vaccine booster

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. 

இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து  தமிழகத்தில் ஒமிக்ரானை  எதிர்கொள்ளத் தேவையான மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், முககவசங்கள் போன்றவை அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 85 சதவீதத்துக்கும் மேல் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் 18 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் பூஸ்டர் ‘டோஸ்’ எனப்படும் 3-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளது.

முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உடையவர்களுக்கு பூஸ்டர் ‘டோஸ்’ செலுத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள ‘இமேஜ்’ கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி 273 நாட்கள் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை முடிந்தவர்களில் முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உடையவர்கள் என 10 லட்சத்து 75 ஆயிரத்து 351 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். இவர்கள் வரும் 31-ம் தேதிக்குள் பூஸ்டர் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் என தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு எதுவும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.