சென்னையில் கடையில் குளிர்பானம் வாங்கி குடித்த சிறுவன், ரத்த வாந்தி எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரது மகன் 6 வயதான லக்ஷ்மன், அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

தற்போது கொரோனா காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சிறுவன் தனது பெற்றோருடன் வீட்டில் இருந்து வருகிறார்.

இப்படியான சூழலில், வீட்டின் அருகில் உள்ள கடையில் நெகிழிப் புட்டியில் அடைக்கப்பட்ட குளிர்பானத்தை வாங்கி, அந்த சிறுவன் குடித்திருக்கிறான். 

அந்த  குளிர்பானம் குடித்த உடனே, அந்த சிறுவனுக்கும் மயக்கம் வந்துள்ளது. இதனால், பயந்துபோன அந்த சிறுவன், தனது பெற்றோரிடம் “எனக்கு மயக்கம் வருகிறது” என்றும், கூறியிருக்கிறான்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், அந்தக் குளிர்பானத்தைச் சோதித்துப் பார்த்ததில், அதில் வேதிப்பொருள் வாசனை அதிகம் வந்திருக்கிறது. 

இதனால், சிறுவனின் பெற்றோர், குடித்த குளிர்பானத்தைக் கீழே துப்பச் செய்து, சிறுவனை வாந்தி எடுக்க வைத்துள்ளனர். 

இதனையடுத்து, உடனடியாக தங்களது மகனை அவர்கள் அங்குள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவனையில் அந்த சிறுவன் தொடர்ந்து ரத்த வாந்தி எடுத்து உள்ளார்.

இதனால், பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அந்த சிறுவனுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் சார்பிலும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கும், போலீசாரிடமும்  தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, சிறுவன் குடித்த குளிர் பானத்தின் தரம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக, இதே குளிர்பானத்தைக் குடித்து சிறுமி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தற்பொழுது மேலும் ஒரு சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளது சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.