அவதூறு வழக்கில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளது. இதனால், அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.

அதாவது, கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து முன்னணி கூட்டம் ஒன்று நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பங்கேற்று பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எச்.ராஜா பேசும் போது, “இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முறைகேடாகச்  செயல்படுவதாகவும், கோயிலுக்கு சொந்தமான நிலங்களை முறைகேடாக விற்பனை செய்வதாகவும்” குற்றம்சாட்டி இருந்தார்.

குறிப்பாக, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப பெண்களை பற்றி எச்.ராஜா, மிக கடுமையான முறையில் அவதூறாகப் பேசியிருந்தார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன், இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் பாஸ்கரனிடம் புகார் அளித்தார். 

இந்த புகாரின் அடிப்படையில் எச்.ராஜா மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக பலமுறை நீதிமன்றத்தில் ஆஜராக எச்.ராஜாக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் இது வரையில் நேரில் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி பரம்வீர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள சம்பவம், சக பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.