புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக எப்போதும் இரட்டை வேடம் போடும் கட்சியாகவே உள்ளது. மேலும் ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதற்கு மோடி அரசே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

பின் பேசியவர், ``பாரதிய ஜனதா கட்சி அநாகரீகமாக பேச காவல்துறையினர் அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது. காவல்துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்று கேள்வி எழுகிறது" என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசியிருக்கும் அவர், ``ஆட்சி மற்றும் காவல் நிர்வாகத்தை பாரதிய ஜனதா கட்சியிடம் தமிழக அரசை ஒப்படைத்து விட்டதா? தனிநபரை விமர்சித்து கண்டனங்கள் நடத்துவது ஆச்சரியமாக உள்ளது இதனை தமிழக காவல்துறை வேடிக்கை பார்ப்பது மிக கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் மதவெறிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் செயலாகவே அமைந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியினர் தனிநபர் விமர்சனத்தை கடைபிடித்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதி, நடிகர் சூர்யா மற்றும் சூர்யாவின் மனைவி ஆகியோர் மிரட்டப்பட்டு இருக்கிறார்கள். இதனை தமிழக அரசு அனுமதிப்பது மதவெறி ஆட்டத்தின் களமாக தமிழகத்தை மாற்றும் பாஜகவின் முயற்சியை அதிமுக அனுமதி அளிப்பதாக உள்ளது.

பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு கேட்கும் ஒரே கட்சியாக விடுதலை சிறுத்தைகள் உள்ளது. தற்போது நடைபெறும் போராட்டம் என்பது விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரானது அல்ல. பெண்களை எதிர்த்த போராட்டமாக நான் கருதுகிறேன் மனுதர்மத்தை காட்டி தன்னை அச்சுறுத்த முடியாது" என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் திருவள்ளூரில் மாவட்ட பாஜ மகளிர் அணி சார்பில் மாவட்ட தலைவர்கள் ஜெமிலா விஜயபாஸ்கர், சோபா ஆகியோர் தலைமையில் விசிக தலைவர் திருமாவளவனை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஓபிசி மாநில தலைவர் ஜெ.லோகநாதன், மாவட்ட தலைவர்கள் ஏ.ராஜ்குமார், எஸ்.ராஜா ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட பொது செயலாளர்கள் ரா.கருணாகரன், எம்.அஸ்வின், ஸ்ரீனிவாசன், ஏ.கே.மூர்த்தி, துணை தலைவர் வக்கீல் சண்முகம், ஆரியா சீனிவாசன், எம்.பன்னீர்செல்வம், வலசை இ.சேகர், எஸ்.கே.எஸ்.மூர்த்தி, அபிலாஷ், சதீஷ்குமார் மற்றும் 100க்கும் மேற்பட்ட மகளிரணியினர் கலந்துகொண்டனர். அப்போது திடீரென விசிக தலைவர் திருமாவளவன் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுதலை செய்தனர்.

பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகளுக்கு எதிராக, திருவள்ளூரில் மேற்கு மாவட்ட விசிக சார்பில் கட்சி தலைவர் திருமாவளவன் மீது அவதூறு பரப்பும் வகையில் பொய்யாக சித்தரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் பாஜவினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் மு.வ.சித்தார்த்தன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முத்தமிழன், மாவட்ட நிர்வாகிகள் திருவரசு, எஸ்.கே.குமார், யோகா, தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் பூண்டி ராஜா, இளஞ்செழியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் தளபதி சுந்தர், அருண் கௌதமன், செல்வம், செந்தில் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

அப்போது, எதிர்ப்புறத்தில் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த பாஜவினரை நோக்கி கண்டன கோஷங்களை எழுப்பி கொண்டு சென்றனர். பின்னர் திருவள்ளூர் போலீஸ் டி.எஸ்.பி துரைபாண்டியன், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் விசிகவினரை தடுத்து நிறுத்தினர். இதனால் விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மேலும் விசிக தலைவர் திருமாவளவன் மீது பொய்யாக சித்தரித்து, அவதூறு பரப்பி வரும் பாஜ மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் அசுவத்தாமன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் நகரம் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் விசிக மாவட்ட செயலாளர் மு.வ.சித்தார்த்தன் புகார் கொடுத்தார்.

இதேபோல விசிக தலைவர் திருமாவளவன் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரி ஆவடி மாநகரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் நேற்று காலை நடைபெற்றது. இதற்கு, தொகுதி செயலாளர் ஆவடி மு.ஆதவன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சித்திக் அலி அனைவரையும் வரவேற்றார். இதில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர், மாநகர செயலாளர் ஜி.ராஜேந்திரன், அவைத்தலைவர் ருக்கு, மதிமுக மாவட்ட துணைச்செயலாளர் வக்கீல் அந்திரிதாஸ், காங்கிரஸ் மாநகர தலைவர் ஏ.ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.