“ 6 மாதத்தில் மீடியாவை கண்ட்ரோல் பண்ணுவோ, கையிலெடுப்போம்” என்று, தமிழ்நாட்டில் பாஜகவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள  அண்ணாமலை, பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரம் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகன், மத்திய இணை அமைச்சர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். 

இதனையடுத்து, துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை, தமிழக பாஜகவின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டார். 

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவராகப் புதிதாக நியமனம் செய்யப்பட்ட கே.அண்ணாமலை, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று பதவியேற்கிறார். 

இந்த நிகழ்வில், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுச் செயலர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, மாநில முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய முன்னாள் செயலர் எச்.ராஜா, பாஜக சட்டப்பேரவைத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்நிலையில், புதிதாக பாஜக மாநிலத் தலைவர் பதவி ஏற்கவுள்ள அண்ணாமலை, கோவை முதல் சென்னை வரை சாலை மார்க்கமாக பாஜக தொண்டர்கள், நிர்வாகிகளைச் சந்தித்து வாழ்த்துப் பெற்று வருகிறார். 

அதன் படி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நேற்றைய தினம் அண்ணாமலைக்கு பாஜகவினர், மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது, பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, “ஊடகங்கள் பாஜக குறித்து தவறான செய்திகளை வெளியிட்டு வருவதாக” குற்றம்சாட்டினார். 

“அவர்களை மக்கள் கண்டுகொள்ள வேண்டாம் என்றும், ஏனென்றால் அடுத்த 6 மாதத்தில் என்ன நடக்குதுன்னு நீங்க பாப்பீங்க என்றும், மீடியாவை கண்ட்ரோல் பண்ணலாம். கையிலெடுக்கலாம். அதைப் பத்தி நீங்க கவலைப்படாதீர்கள். ஏனெனில் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக எல்.முருகன் தற்போது இருக்கிறார்” என்று, காட்டமாகப் பேசினார். 

அண்ணாமலையின் இந்த பேச்சு, தமிழகம் முழுவதும் பரவிய நிலையில், தற்போது புதிய சர்ச்சை வெடித்து உள்ளது.

குறிப்பாக, “தமிழக ஊடகங்களுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்த, அண்ணாமலைக்கு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் கண்டனம்” தெரிவித்து உள்ளார்.

இது குறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “'ஊடகங்கள் விரைவில் பாஜகவிற்கு ஆதரவாகச் செயல்படும் என பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை பேசியது, ஊடகங்களை மிரட்டும் செயல்” என்று, பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்து உள்ளார்.