உள்ளாட்சி தேர்தலில் கோவையில் நடைபெற்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக நிர்வாகி ஒருவர், தனது குடும்பத்தில் 5 பேர் இருந்தும் ஒரேயொரு ஓட்டு பெற்றுள்ளது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ள நிலையில், 74 வாக்கு எண்ணும் மையங்களில் 31,245 அலுவலர்கள் வாக்குச்சீட்டுகளை எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் படி, தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவானது கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தற்போது அந்த வாக்குகள் அனைத்தும் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.

சில தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் அதற்குள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் தான், கோவையில் நடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்காக தேர்தல் நடைபெற்றது. 

அங்கு தற்போது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குருடம்பாளையம் 9 வது வார்டு இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. 

குறிப்பாக, இந்த பகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கார்த்திக் ஒரு ஓட்டு வாங்கி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

அத்துடன், குறிப்பிட்ட இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அருள் ராஜ், 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று உள்ளார். 

மேலும், இந்த தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வை சேர்ந்த வைத்தியலிங்கம், 196 வாக்குகள் பெற்று உள்ளார். குறிப்பிட்ட இந்த தொகுதியில் மொத்தம் 910 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன.
 
இந்த நிலையில், இந்த தொகுதியில் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று ஒரு ஒரு ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளர் கார்த்திக்கின்  குடும்பத்தில் தாய், தந்தை, மனைவி, சகோதரர்கள் என மொத்தம் 5 பேர் இருக்கிறார்கள். 

இவர்களுடன் தேர்தலில் போட்டியிட்ட கார்த்திக்கியையும் சேர்த்தால் அவர்களது குடும்பத்தில் மொத்த எண்ணிக்கை 6 பேராக உள்ளது. இது தவிர, அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவருடுன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சக கட்சி தொண்டர்கள் என்று பலரும் இருக்கிறார்கள். ஆனால், அவர் ஒரே ஒரு ஓட்டு மட்டும் வாங்கியது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக நிர்வாகி ஒருவர், தனது குடும்பத்தில் தன்னையும் சேர்த்து மொத்தம் 6 பேர் இருந்தும், ஒரேயொரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ளது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இது, பாஜகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.