“தமிழக மக்கள் அடுத்த 10 நாட்களில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்” என்று, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

கொரோனா 2 வது அலையின் தொற்று பரவல், இந்தியாவில் சற்று குறைந்து வருகிறது என்றாலும், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பானது இந்தியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. 

அதன் படி, இந்தியாவில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 37,593 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 46,164 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால், இந்தியாவில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கையானது 3 கோடியே 25 லட்சத்து 58 ஆயிரத்து 530 ஆக உயர்ந்திருக்கிறது. 

அதே போல், தமிழகத்திலும் கொரோனா தொற்று சற்று குறைந்து வந்த சூழலில் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. 

இவற்றுடன், கடற்கரை மற்றும் தியேட்டருக்கு வர  பொது மக்களுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. 

இந்த சூழலில் தான், நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,573 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 

இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தில் மொத்தம் 26 லட்சத்து 5 ஆயிரத்து 647 ஆக உயர்ந்திருக்கிறது.

அத்துடன், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இது வரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின்  மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 788 ஆக உயர்ந்திருக்கிறது. 

இதனால், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தமிழகம் முழுவதும் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

அதே போல், கோவை மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 47 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் கட்டுப்பாட்டுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நோய் சென்றுவிட்டது என்று நினைக்காமல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்” என்று, அறிவுறுத்தி உள்ளார்.

“மக்கள் தொகையை பொருத்த வரை ஏற்கனவே நமக்கு குறைந்த அளவில் தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டது என்றும், தற்போது ஒரு கோடி தடுப்பூசி கொடுக்கப்பட வேண்டும் என மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்” என்றும், அவர் குறிப்பிட்டார்.

“தமிழகத்தில் 90.24 லட்சம் கோவிஷீல்டு, 14.74 லட்சம் கோவாக்சின் படிப்படியாக செயல்பாட்டுக் ஏற்றவாறு தரப்பட்டு உள்ளது” என்றும், அவர் கூறினார். 

“தமிழகத்தின் சில இடங்களில் தேனீர் கடைகள், ஹோட்டல்களில் 100 சதவீத இருக்கைகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து உள்ளனர்” என்றும், அவர் வேதனை தெரிவித்தார். 

“அதையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும், ஹோட்டல்களில் உணவு அருந்தும் போது கண்டிப்பாகத் தனி மனித இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்பதைக் கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும்” சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

மேலும், “ஒரு மாநிலத்தில் ஒரு விழுக்காடு மட்டும் அல்லாது தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டுப் பணிகளைத் தீவிரப்படுத்தி அங்கேயும் மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்கும் வகையிலும் தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும், அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, “தமிழகத்தில், அடுத்த வரும் 10 நாட்களில் மிகவும் கூர்ந்து கண்காணித்துச் செயல்பட வேண்டும் என்றும், கேரளாவில் ஓணம் பண்டிகைக்குப் பிறகு கொரோனா அதிகரித்து உள்ளது” என்றும், ராதாகிருஷ்ணன் எச்சரிக்கையாகவே தெரிவித்தார்.