பங்களாதேஷ் இளம் பெண் கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில் கைதானவர்கள், 30 பெண்களை வைத்து விபசார தொழில் ஈடுபட்டு வந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வாரம் பெங்களூரு ராமமூர்த்திநகரில் இளம் பெண் ஒருவர், 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்கார கொடுமைக்கு ஆளாகித் தாக்கப்படும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

அந்த வீடியோவில், ஒரு இளம் பெண்ணை 4 பங்களாதேஷ் ஆண்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, அந்த பெண்ணின் தனிப்பட்ட பாகத்தில் மது பாட்டிலால் தாக்கும் கொடூரமான காட்சிகள் இடம் பெற்றிருந்தன. 

அந்த வீடியோவை பார்த்த இணைய வாசிகள் பலரும், கொதித்து எழுந்த நிலையில், தங்களது கோபத்தைக் கடுமையான கண்டனங்களாகத் தெரிவித்திருந்தனர். 

இந்த வீடியோவை போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கும் சென்றது. இதனையடுத்து, “இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது” என்கிற விபரம் தெரியாமல் இருந்து வந்த நிலையில், சம்பந்தப்பட்ட வீடியோவில் உள்ளவர்களைப் பற்றி தகவல் தருபவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும்” என்று, அசாம் மாநில காவல் துறை அறிவித்திருந்தது.
 
அதன் தொடர்ச்சியாக, அந்த வீடியோவில் உள்ள அனைவருமே பங்களாதேஷை சேர்ந்தவர்கள் என்று, போலீசார் கண்டுபிடித்தனர். அந்த 4 பேரும், அந்த பெண்ணை பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்குக் கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 

அத்துடன், இளம் பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய 23 வயதான சாகர், ஹகில், 25 வயதான ரிடோய் பாபோ, 30 வயதான முகமது பாபு சாஹிக் மற்றும் ஒரு பெண் என அந்த 5 பேரை பெங்களூரு போலீசார் அப்போது அதிரடியாகக் கைது செய்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில், “கைதானவர்களும் பாதிக்கப்பட்ட பெண்ணும் வங்காள தேசம் நாட்டிலிருந்து வந்த
ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள்” என்பது தெரிய வந்தது.

மேலும், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை தேடுவதற்காக அண்டை மாநிலத்திற்கு போலீசார் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவரிடம் விசாரணை நடத்தி போலீசார் வாக்குமூலம் பெற்றனர். 

அப்போது, “அவர்களுக்குள் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் அந்த பெண்ணை அங்கிருந்து இந்தியாவுக்குக் கடத்தி வந்து, கொடுமைப்படுத்தி, அடித்து உதைத்து, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததும்” தெரிய வந்தது. இந்த வழக்கு தொடர்பாக, உயர் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் முழு அளவில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, பெங்களூரு நகர காவல் ஆணையாளர் கமல் பன்ட் அப்போது கூறினார். 

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இளம் பெண் கிடைத்த பிறகே முழுமையான காரணங்கள் என்னவென்று தெரிய வரும் என்றும், போலீசார் தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் ஒரு தம்பதி உள்பட 12 பேர் இது வரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “கைதானவர்கள் அனைவரும் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், பெங்களூருவில் சட்ட விரோதமாகத் தங்கி, விபசார தொழில் நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது. 

முக்கியமாக, கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான இளம் பெண்ணும் விபசார தொழிலில் ஈடுபட்டு வந்ததும்” தெரிய வந்தது.

“இப்படியாக, விபசார தொழிலில் ஈடுபட்டு வந்தபோது, அவர்களுக்குள் பணப்பிரச்சினையில் அவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டதும்” போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 

“பங்காளதேசத்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்து இந்த கும்பல், பெங்களூரு மட்டுமின்றி கேரளா, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் விபசார தொழில் நடத்தி வந்திருக்கிறார்கள்.

“இதற்காகவே, இந்த கும்பல் திட்டமிட்டு பங்காள தேசத்தில் இருந்து இளம் பெண்களை சட்டவிரோதமாக மேற்கு வங்காளத்திற்கு முதலில் வரவழைத்து, அங்கிருந்து பெங்களூருவுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். இப்படியாக, இது வரை 30 க்கும் மேற்பட்ட இளம் பெண்களை அந்த கும்பல். சட்ட விரோதமாக இந்தியாவுக்கு அழைத்து வந்ததிருப்பதை” போலீசார் தற்போது கண்டுபிடித்து உள்ளனர்.

குறிப்பாக, “இளம் பெண்களிடம், பெங்களூருவில் மதுபான விடுதியில் நடன அழகி உள்ளிட்ட வேலை வாங்கி தருவதாகக் கூறி, அழைத்து வந்து, அவர்களை இங்கு விபசாரத்தில் தள்ளியதும், இதில் அந்த கும்பலைச் சேர்ந்த 12 பேர் பணம் சம்பாதித்து வந்தது” தெரிய வந்திருக்கிறது. 

மிக முக்கியமாக, “இந்த விபசாரத்தால், தினமும் 1 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்ததாகவும், இதனால் சில இளம் பெண்கள், அவர்களுடன் சேர்ந்து விபசாரத்தில் ஈடுபடாமல், தனியாகச் சென்று விபசாரம் செய்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது” என்பதையும், போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.