“தில் இருந்தால் என்னை கைது பண்ணுங்க” சவால் விடும் பாபா ராம்தேவ்!
By Aruvi | Galatta | May 27, 2021, 11:21 am
“அரசாங்கத்திற்குத் துணிவு இருந்தால் தன்னை கைது செய்யட்டும்” என்று, யோகா சாமியார் பாபா ராம்தேவ் பேசி உள்ள வீடியோ ஒன்று, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.
பிரபல யோகா சாமியார் பாபா ராம்தேவ், அவ்வப்போது எதாவது பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வாடிக்கையான ஒன்று. அந்த வகையில், அவர் தற்போது பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, சமீப காலமாக இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலை மிகத் தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கும் இந்த நிலையில், பல லட்சம் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன், கூடவே உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
இதனால், “ஆங்கில மருத்துவமான அலோபதி நவீன மருத்துவ முறை, முட்டாள் தனமானது எனவும், தோல்வி அடைந்தது” எனவும், பாபா ராம்தேவ் பேசியிருந்தார்.
அத்துடன், “அலோபதி மருந்துகளை எடுத்துக்கொண்டு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் உயிரிழந்தார்கள்” என்றும், அவர் பேசியிருந்தார். இது, பெரும் சர்ச்சையாக வெடித்தது.
சாமியார் பாபா ராம்தேவின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு, இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
மேலும், “நவீன மருத்துவ முறை பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் பாபா ராம்தேவ் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம், இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதனையடுத்து, “பாபா ராம்தேவ் தனது கருத்துகளைத் திரும்பப் பெற வேண்டும்” என்று, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பாபா ராம்தேவை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்த அவர், “இரவும் பகலுமாக கொரோனாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் நாட்டுக்கே கடவுள் அனுப்பிய வரம் போன்றவர்கள்” என்று பதிவிட்டு இருந்தார்.
அத்துடன், “பாபா ராம்தேவின் கருத்துகள் கொரோனா போராளிகளை அவமதிக்கும் வகையிலும், ஒட்டு மொத்த நாட்டின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையிலும் உள்ளது” என்று, தனது கருத்துக்களைக் கூறிய அமைச்சர் ஹர்ஷ், “பாபா ராம்தேவ், தனது கருத்துகளைத் திரும்பப் பெற வேண்டும்” என்றும், அறிவுறுத்தி இருந்தார்.
அதே நேரத்தில், “சாமியார் பாபா ராம்தேவை கைது செய்ய வேண்டும்” என்று, சமூக வலைத்தளங்களில் #ArrestRamdev என்ற ஹாஷ்டேக் டிரெண்டானது.
இந்த நேரத்தில், இது குறித்து சாமியார் பாபா ராம்தேவிடம் கேள்வி எழுப்பி கேட்கப்பட்டது. அப்போது பதில் அளித்த பாபா ராம்தேவ், “அரசுக்கு துணிவிருந்தால் என்னை கைது செய்யட்டும்” என்று, பேசி உள்ளார்.
அதே போல், “பொது மக்கள் சமூக வலைத்தளங்களில் இது போன்று பேசுவதும், செய்வதில் ஆச்சரியம் இல்லை” என்றும், என்றும், அவர் பேசி உள்ளார். இந்த வீடியோவின் உண்மைத் தன்மையும் இது வரை உறுதி செய்யப்படாத நிலையில், தற்போது இந்த வீடியோ பெரும் வைராலாகி வருகிறது.