அயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலிருந்த பாபர் மசூதியானது, கடந்த 1992 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களால் இடிக்கப்பட்டது. இதனையடுத்து, அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடமான 2.77 ஏக்கர் நிலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தற்போது வரை நடைபெற்று வருகிறது. 

Ayodhya

இந்த வழக்கில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தைச் சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாடா, ராம் லீலா அமைப்புகள் என 3 தரப்பினரும் பிரித்துக்கொள்ள வேண்டும் என, கடந்த 2010 ஆம் ஆண்டு அலாகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்ற நிலையில், இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.

குறிப்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வரும் நவம்பர் 17 ஆம் தேதி ஓய்வுபெறும் நிலையில், இந்த வழக்கு தொடர்பான அனைத்து கட்ட வாதங்களையும், அக்டோபர் 17 ஆம் தேதிக்குள் முடித்துக்கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, நவம்பர் 17 ஆம் தேதிக்குள் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே நீதிமன்றம் அறிவித்திருந்தது.

தீர்ப்பு வழங்க 4 வார காலங்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தசரா விடுமுறைக்குப் பின், இன்று இந்த வழக்கின் இறுக்கட்ட விசாரணை தொடங்குகிறது.  

Ayodhya

நாடே எதிர்பார்க்கும் அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக இந்த வழக்குப் பார்க்கப்படுவதால், வழக்கின் இறுதிக்கட்ட வாதம் தொடங்கும் முன்பாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோத்தில் டிசம்பர் 10 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அதிரடியாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், அரசியல் கூட்டங்கள் நடத்த இங்கு  அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 4 பேருக்கு மேல் சாலையில் ஒன்றாகச் சேர்ந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், தீபாவளியின்போது பட்டாசுகள் விற்பதற்கும், தயாரிப்பதற்கும் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Ayodhya

144 தடை உத்தரவு காரணமாக, தற்போது அயோத்தியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், ராணுவ வீரர்களும் அங்குக் குவிக்கப்பட உள்ளனர்.