மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரசியலில் எதுவும் நடக்கும் என்பதற்கு சம கால உதாரணமாகத் திகழ்கிறது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீதான இந்த தாக்குதல் சம்பவம்.

மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளன. அங்கு, மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. அதன் படி வரும் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகின்றன. 

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2 ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 

இந்த தேர்தலில் அந்த மாநிலத்தில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் - பாஜக வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது. 

அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் இதுவரை அசைக்க முடியாத சக்தியாக இருந்த இடதுசாரிகள், இந்த முறை காங்கிரஸ் மற்றும் இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகளுடன் கூட்டணியாக இணைந்து இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. 

இப்படியான சூழ்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நந்தி கிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி, பாஜகவில் சேர்ந்த சுவேந்து அதிகாரி போட்டிப் போடுகிறார்.

இதனால், சுவேந்துக்கு பதிலடி தரும் வகையிலேயே, அவர் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தற்போது போட்டியிடுவதாக அறிவித்தார்.

இதற்காக, நந்தி கிராம் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை மம்தா பானர்ஜி நேற்று தாக்கல் செய்தார். 

அதன் படி, ஹல்டியா பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று, மம்தா பானர்ஜி தன்னுடைய வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். 

அதனைத் தொடர்ந்து, மாலையில் பர்பா மெதினிபுர் மாவட்டத்தின் ரியாபாரா பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள அவர் வருகை தந்தார். அப்போது, அங்குள்ள கோயிலுக்கு வெளியே காரின் அருகே மம்தா பானர்ஜி நின்றிருந்தார். அப்போது, அவரை 4, 5 பேர் தாக்கியதாக மம்தா பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளார்.

இதில் மம்தா பானர்ஜி காலில் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரது பாதுகாப்பு அதிகாரிகள் மம்தா பானர்ஜியை தூக்கிக் கொண்டு வாகனத்தில் ஏற ஓடினார்கள். 

அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் அவசர அரசமாகப் பேசிய மம்தா பானர்ஜி, “என் கார் கதவு அருகே நான் நின்றிருந்தேன். அப்போது, 4, 5 பேர் என்னைத் தள்ளி விட்டு கடுமையாகத் தாக்கி உள்ளனர். என்னை சூழ்ந்து கொண்டு கார் கதவு நோக்கி தள்ளி விட்டுள்ளனர். கதவில் எனது கால் மோதியது. இதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது” என்று, ஆவேசமாகக் கூறினார்.

இதனையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் உள்ள SSKM மருத்துவமனையில் அவசர அவசரமாக அனுமதித்தனர்.

இதில், மம்தா பானர்ஜிக்கு இடது காலிலும், கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மம்தா மீதான தாக்குதல் குறித்து அறிந்த அவரின் ஆதரவாளர்கள் மருத்துவமனை முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அத்துடன், மம்தா பானர்ஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்த நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், “ஆரம்ப பரிசோதனையில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி இருப்பதாகவும், அவருக்கு இடது கணுக்கால், கால் மற்றும் காயங்கள் உள்ளதாகவும், வலது தோள்பட்டை, முன் கை மற்றும் கழுத்தில் ஏற்பட்ட கடுமையான அளவில் எலும்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன” என்றும், ” கூறப்பட்டுள்ளது.

அத்துடன், “மார்பு வலி, மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக” மம்தா பானர்ஜி தெரிவித்ததாகவும், அவர் 48 மணி நேரம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவார்” என்றும், மருத்துவமனை தரப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதன் தொடர்ச்சியாக இது தாக்குதல் சம்பவம் தொடர்பாகத் தனது டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள அபிஷேக் பானர்ஜி,  “மே 2 ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை வங்காள மக்களின் சக்தியைக் காண உங்களை நீங்களே (பாஜக) தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டு உள்ளார்.

அதே போல், மம்தா பானர்ஜி மீதான இந்த கொடூர தாக்குதலுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தேஜஸ்வி யாதவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.