அரியலூரில் செந்துறை பகுதி அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகனான விக்னேஷ் (வயது 19). இவர், 12 ஆம் வகுப்பை முடித்து விட்டு நீட் தேர்வுக்காக தயராகி வந்துள்ளார். 

வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மூன்றாவது முறையாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார் விக்னேஷ். இதனால் ஏற்பட்ட பதற்றத்தால் மாணவர் விக்னேஷ் நேற்று முன்தினம் தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாக கூறப்பட்டது. ஏற்கெனவே, கடந்த மாதம் கோவையில் சுபஸ்ரீ என்ற மாணவி நீட் தேர்வினால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டத்ஆக கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது விக்னேஷின் மரணம், பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தற்கொலைக்கான காரணம் உறுதிபடுத்தப்படாத நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள செந்துறை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மருத்துவ இளநிலை படிப்புகளுக்காக தேசிய தேர்வு முகாமை நீட் நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. அரசு பள்ளி மாணவர்களின் கனவை சீர்குலைக்கும் இந்த சிபிஎஸ்சி சிலபஸை கொண்ட தேர்வினை நடத்தகூடாதென தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. இருப்பினும், தேசிய தேர்வு முகாமை நீட் தேர்வை நடத்துவதில் இருந்து பின்வாங்காமல் உள்ளது

விக்னேஷின் பெற்றோருக்கு திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் கட்சியின் சார்பில் 5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கி இருக்கிறார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், ``நீட் தேர்வால் வருடந்தோறும் மாணவர்கள் உயிரிழப்பது குறித்து தமிழக அரசுக்கு அக்கறை இல்லாமல் உள்ளது டாஸ்மாக் திறப்பதற்கு உச்ச நீதிமன்றம் சென்ற தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் செல்லாதது ஏன் மத்திய அரசுக்கு அடிமை அரசாக தமிழக அரசு உள்ளதால் இந்த நிலைமை நீடித்து வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை ஆளும் அரசு செவி சாய்க்காது மக்கள் மீது அக்கறை இன்மையையே காட்டுகிறது" என கூறினார்.

மாணவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு மற்றும் அரசு சார்ந்த பணி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆளுங்கட்சி சார்பாக, முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள் தற்கொலை போன்ற முடிவை எடுப்பது மனவேதனை தருவதாக கூறியுள்ளார். வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மனஉறுதியையும், விடா முயற்சியையும் கைவிடக்கூடாது என்று அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் மாணவர்களின் நலனில் தமிழக அரசு அக்கறையோடு இருக்குமெனவும் அவர் உறுதி அளித்துள்ளார். இதுபோல் மாணவரின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவியை பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

மேலும் விடுதலை சிறுத்தகைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"விக்னேஷ் மருத்துவராக வேண்டும் என்கிற ஆசையில் தொடர்ந்து நீட் தேர்வு எழுதி, மருத்துவம் படிப்பதற்கு இயலாத நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். ஆனால், இந்த ஆண்டும் மருத்துவக் கனவை நனவாக்க முடியாது என்கிற மன அழுத்தம் ஏற்பட்டு அவர் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டுள்ள நிலை ஏற்பட்டிருக்கிறது.

மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்யும் அளவுக்கு நீட் தேர்வு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது என்பதை நாட்டை ஆள்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நீட் தேர்வு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் கூடாது என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விடுக்கிற வேண்டுகோள். இந்த ஆண்டுக்கு மட்டும் வேண்டாம் என்று இல்லை. இனி எப்போதும் வேண்டாம் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கை.

அனிதாவைத் தொடர்ந்து பல மாணவர்களை இழக்கும் நிலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலை தொடர்வது மிகுந்த வேதனை அளிக்கிறது.

தமிழக அரசு நீட் தேர்வு வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தாலும் கூட அதைத் தவிர்க்க முடியாத ஒரு இக்கட்டில் தமிழகம் உள்ளதாக முதல்வரே கூறியிருக்கிறார்.

ஏழு மாநில முதல்வர்கள் நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடுத்தார்கள். நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழக அரசு அவ்வாறு வழக்குத் தொடுக்காதது ஏன்? கடுமையாக இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். இத்தகைய மரணங்கள் தொடர்வதைத் தடுக்க வேண்டும்.

விக்னேஷ் உயிரிழப்பால் அவரது குடும்பம் எந்த அளவுக்கு துக்கத்தில், துயரத்தில் வீழ்ந்து கிடக்கிறது என்பதை தமிழக அரசும் சரி, மத்திய அரசும் சரி புரிந்துகொள்ள வேண்டும்.

நீட் தேர்வு இல்லையென்றால் விக்னேஷ் எப்போதோ தனது 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மருத்துவக் கல்வி பெற்றிருப்பார். அவர் மருத்துவம் படிக்க இயலாமைக்கு நீட் தேர்வுதான் காரணம் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

விக்னேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். விக்னேஷ் குடும்பத்திற்கு தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

தமிழக அரசு விக்னேஷ் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க உறுதி அளித்து இருப்பதை வரவேற்கிறோம். ஆனால் இழப்பீடு போதாது.

தமிழக அரசு ஏற்கெனவே இதனால் பாதிக்கப்பட்ட பலருக்கு அல்லது உயிரிழந்தவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கவில்லை. விக்னேஷ் குடும்பத்திற்கும் இந்த இழப்பீடு போதாது. எனவே, இதனை 50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

மாணவர்களுக்கு நான் விடுக்கின்ற வேண்டுகோள், மருத்துவராக வேண்டும் என்கிற மாயையிலிருந்து முதலில் விடுபட வேண்டும். மருத்துவரானால் தான் வாழ்க்கையில் பெரிய கவுரவம் என்றெல்லாம் கருத வேண்டிய அவசியமில்லை. தன்னம்பிக்கை வேண்டும். தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று முதலில் மாணவர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

தமிழக அரசு இதில் துணிவாக முடிவு எடுக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று துணிச்சலாக அறிவிப்பதில் தமிழக அரசுக்குத் தயக்கம் தேவையில்லை.

மத்திய அரசு நம் மீது திணிக்கிற அனைத்தையும் நெருக்கடிக்கு இடையிலே ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தமிழக முதல்வர் பின்வாங்காமல் இதில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.