முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் சரவணன், முருகன் உள்ளிட்டோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென்று இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த சில தினங்களுகு்கு முன்பு அதிரடியாக சோதனையில் ஈடுபட்டது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது. அத்துடன், விராலிமலை அருகே இலுப்பூரில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை நடைபெற்றது. 

மேலும், விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர் மற்றும் அவர் மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.  விஜயபாஸ்கர் வீடு மட்டுமல்லாது அவருக்கு நெருக்கமான பலரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் தான், விஜயபாஸ்கர் தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதலே திடீரென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

விஜயபாஸ்கர் உதவியாளர் மற்றும் அவரது நண்பர் வீடுகள் என்று சென்னையில் 3 இடங்களிலும் சேலத்தில் ஒரு இடத்திலும் என மொத்தமாக 4 இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய உதவியாளர் சரவணன் வீடு, நண்பர் சந்திரசேகரின் ரியல் எஸ்டேட் நிறுவனம், மற்றொரு உதவியாளர் முருகன் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் ஒத்துழைப்பு இல்லாததாலும், வீடு பூட்டப்பட்டு இருந்ததாலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சீல் வைத்தனர்.

தற்போது, அந்த இடங்களில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று பூட்டை உடைத்து அங்கு அதிரடியாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதே போல், இளங்கோவனால் கட்டப்பட்டு வரும் புதிய மாளிகை வீட்டால் அவர் தற்போது லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் வசமாக சிக்கி உள்ளார்.

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவரும்,  தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தலைவரும்,  ஜெயலலிதா பேரவையின் புறநகர் மாவட்ட செயலாளருமான  இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

இவர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவர் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.