“தமிழ்நாட்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக இறுதித் தேர்வுகள் நடைபெறும்” என்று, தற்போது பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளது. இதனால், மாணவர்களும் பெற்றோர்களும் சற்று குழப்பம் அடைந்து உள்ளனர். 

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் 3 அலைகளாக வரிசையாக வந்து சென்றாலும், கடந்த 2 வருடங்களாக பள்ளிகளில் வகுப்புகள் மற்றும் மாணவர்களுக்கான இறுதி தேர்வுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன.

என்றாலும், சூழலுக்கு ஏற்ப 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்ட வந்த நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன.

இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து முற்றிலும் குறைந்திருக்கும் சூழலில், கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தொடர்ந்து வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

இதனால், “தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வருகின்ற மே 6, 9 ஆகிய தேதிகள் முதல் மே 30, 31 ஆகிய தேதிகள் வரை நடைபெறும் என்றும், அதே போல், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 5 ஆம் தேதி முதல், மே 28 ஆம் தேதி வரை நடைபெறும்” என்றும், ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை கூறியிருந்தது.

இந்த நிலையில் தான், “5 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு இல்லை” என்கிற செய்தி ஒன்று, கடந்த சில நாட்களாக பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான், 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும்” என்றும், தமிழக பள்ளிக் கல்வித்துறை நேற்று மாலை அறிவித்ததாக செய்திகள் வெளியானது.

ஆனால், தற்போது “தமிழகத்தில் 1 முதல் 12 ஆம்  வகுப்பு வரை மாணவர்களுக்கு கண்டிப்பாக இறுதித் தேர்வுகள் நடைபெறும்” என்று, பள்ளிக் கல்வித் துறை முதல்மைச் செயலாளர் காகர்லா உஷா, கூறியுள்ளார்.

முன்னதாக, “6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு வரும் மே மாதம் 5 ஆம் தேதி முதல், 13 ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும்” என்று, பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.

அத்துடன், “9 ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் வரும் மே மாதம் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடைபெறும்” என்றும், கூறப்பட்டு உள்ளது.

முக்கியமாக, “தேர்வு நடைபெறாது என்று வெளிவந்த செய்தி தவறானது என்றும், அனைத்து மாணவர்களுக்கும் கண்டிப்பாக தேர்வுகள் நடைபெறும்” என்றும் பள்ளிக் கல்வித் துறை முதல்மைச் செயலாளர், தற்போது தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக, “6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளானது, மே மாதம் 30 ஆம் தேதி வெளியிடப்படும்” என்றும், தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது.

அதே நேரத்தில், “இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் படி 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் யாரும்  தோல்வியடைய மாட்டார்கள்” என்றும், தற்போது தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதே போல், “நடப்பு கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் என்பது மே 13 ஆம் தேதி ஆக உள்ளது” என்றும், அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

மேலும், “2022-23 ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் அடுத்து வரும் ஜுன் 13 ஆம் தேதி தொடங்கும் என்றும், ஆனால் 11 ஆம் வகுப்புக்கு மட்டும் ஜுன் 24 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும்” என்றும், தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக, இடையில் வகுப்புகள் பல நாட்கள் முறையாக நடக்காத காரணத்தால், தற்போது பள்ளியின் வேலை நாட்கள் அதிகரிக்கப்பட்டு, தேர்வுகள் மே மாதம் நடக்கும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “1-5 ஆம் வகுப்புகளுக்கு இறுதித் தேர்வுகள் நடைபெறும்” என்று, உறுதியுடன் தெரிவித்து உள்ளார். 

மேலும், “1-5 ஆம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், ஆனால் குறைந்த பாடத்திட்டத்திலேயே தேர்வுகள் நடத்தப்படும்” என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்து உள்ளார்.

இதனிடையே, “1-5 ஆம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை என்றும், தற்போது நடைபெறும் என்றும் அறிவிப்புகள் வெளியானதாக செய்திகள்  மாறி மாறி வருவதால், பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் சற்று குழப்பம் அடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.