அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் நிதி உதவியின் கீழ் எம்.டெக் உயிரி தொழில்நுட்பவியல் மற்றும் எம்.டெக் கம்யூனிட்டேஸ்னால் தொழில்நுட்பவியல் ஆகிய படிப்புகளுக்கு  தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், அந்த தேர்வுகளை ரத்து செய்வதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.


தேர்வை ரத்து செய்ததற்கு காரணமாக அண்ணாபல்கலைக்கழகம் கூறியது, ’மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதா அல்லது மாநில அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதா  என்ற குழப்பம் ஏற்பட்டதால் தேர்வை ரத்து செய்தோம்’ என்றது. 


இதன் பின்பு மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் தீர்ப்பில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு வந்ததன் அடிப்படையில் தேர்வுகள் நடைப்பெற்று, மத்திய அரசு இடஒதுக்கீட்டில் முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு பின்பற்றபடுவதால் அதன் அடிப்படையில் 3 இடங்களும் ஒதுக்கப்பட்டது. 


மத்திய அரசின் 10 சதவீத இடஒதுக்கீட்டை, தமிழக அரசு பின்பற்றாத நிலையில் அண்ணா பல்கலைக் கழகம் எப்படி பின்பற்றியது என்று  தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. 


விசாரணையில் நீதிபதி, ‘’ 10 சதவிகிதம் இடஒதுக்கீடு அமல்படுத்தியது  ஏன்? தமிழக அரசு அமல்படுத்தாத நிலையில் ஏன் குழப்பத்தை ஏற்படுத்தினீர்கள் என்று அண்ணாபல்கலைக் கழகத்திற்கும், மத்திய அரசுக்கும் கடும் கண்டனமும், அதிருப்தியும் தெரிவித்துள்ளார்.

இதனால் மத்திய அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் உரிய விளக்கத்தை விரைவில் அளிக்க வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.