பள்ளி வளாகத்தில் 5 மாணவர்கள் மது அருந்தி விட்டு நடனமாடியதாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்மந்தப்பட்ட 5 மாணவர்களும் அதிரடியாக பள்ளியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

ஆந்திரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 8 மற்றும் 9 ஆம் வகுப்பு படிக்கும் குறிப்பிட்ட 5 மாணவர்கள், தங்களது வகுப்பறையில் மது போதையில் நடனமாடியதாக கூறப்படுகிறது. 

இதனால், அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் உடனடியாக இது குறித்து வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்து உள்ளனர்.

இனையடுத்து, உனடியாக அங்கு வந்த வகுப்பு ஆசிரியர், சம்மந்தப்பட்ட 5 மாணவர்களின் பைகளை சோதனையிட்டார். அப்போது, அவர்களது பையில் இருந்து 2 மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. 

உடனடியாக, அந்த 2 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்த பள்ளி ஆசிரியர், அது குறித்து உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதில், 4 மாணவர்கள் 8 ஆம் வகுப்பு படிக்கின்றனர் என்றும், 5 வது மாணவர் 9 ஆம் வகுப்பு படிப்பதும் தெரிய வந்தது. 

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் டி.சக்ரு நாயக், சம்மந்தப்பட்ட 5 பள்ளி மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து, நடந்த சம்பவத்தை கூறி எச்சரித்து உள்ளனர்.

இதனையடுத்து, அந்த பள்ளியின தலைமை ஆசிரியர் சக்ரு நாயக், குறிப்பிட்ட 5 மாணவர்களின் பெற்றோரிடம், சம்மந்தப்பட்ட 5 மாணவர்களின் இடமாற்று சான்றிதழையும் வழங்கி உள்ளனர். 

அத்துடன், குறிப்பிட்ட இந்த 5 மாணர்களும் மற்ற பள்ளி மாணவர்களை கெடுப்பதால் அவர்களை வேறு பள்ளிக்கு அழைத்துச் செல்லும் படி பள்ளியின் தலைமை ஆசிரியர், அந்த மாணவர்களின் பெற்றோரை கேட்டுக் கொண்டார். 

இது பற்றி தலைமை ஆசிரியர் சக்ரு நாயக் பேசும் போது, “மற்ற மாணவர்களை பாதுகாக்கும் வகையில், நாங்கள் இந்த நடவடிக்கை எடுத்து உள்ளோம்” என்று, குறிப்பிட்டார்.

மேலும், இந்த சம்பவம் பற்றி குழந்தை உரிமைகள் அமைப்பான திவ்யா திஷா சைல்டுலைனின் இயக்குனர் இசிடோர் பிலிப்ஸ் பேசும் போது, “ஒழுங்கு நடவடிக்கை தீவிரமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும், குறிப்பிட்டார். 

“மாணவர்களை வெளியேற்றுவதன் மூலம் பள்ளி வெறுமனே கைகளை கழுவ முடியாது என்றும், பள்ளிக்குள் சில திருத்த நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்றும், பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு மாணவரையும் கண்காணிக்கும் பொறுப்பு பள்ளியின் பொறுப்பு” என்றும், தெரிவித்தார்.

அத்துடன், “குற்றம் செய்த மாணவர்களை வெளியேற்றுவதற்குப் பதிலாக, தவறான நடத்தைகளைத் தடுக்க பள்ளிகள் ஆலோசனை மற்றும் மனநல ஆலோசனைகளை பெற வேண்டும்” என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.

இதனிடையே, கடந்த வாரம் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த சம்பம் தொடர்பான மது குடிக்கும் மாணவர்களின் வீடியோவானது, சமூக வலைத்தளங்களில் நேற்று பெரும் வைரலான நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர், குறிப்பிட்ட அந்த 5 மாணவர்களையும் பள்ளியை விட்டு வெளியேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.