“தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை, மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும்” என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தெரிவித்து உள்ளார்.

கொரோனா என்னும் பெருந்தொற்று காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு முழுமையாக நடத்த முடியாத சூழல் நிலைக்க இருந்த நிலையில், தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ - மாணவிகள் எழுதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு, நாளைய தினம் தொடங்குகிறது.

அதே நேரத்தில், தமிழகத்தில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கி உள்ள நிலையில், வெயிலின் உக்கிரம் கடுமையாக அதிகரித்து உள்ளது.

அத்துடன், கோடை காலம் தொடங்கியது முதலே சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மிக கடுமையாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று முதல் தமிழகத்தில் அக்னி நட்சத்திரமும் தொடங்கி உள்ளதால், வெயிலின் தாக்கம் இன்னும் கடுமையாகி உள்ளது.

இதனால், தமிழகம் முழுவதும் 9 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்படுமா? என்று, எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. இது தொடர்பாக அரசு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வந்தன. 

இந்த சூழலில் தான், “தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில், “தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்து இருப்பதோடு, இன்று முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலமும் இன்று முதல் தொடங்கி, வரும் 28 ஆம் தேதி வரை நீடிக்கும் நிலையில், இதன் காரணமாக வரும் 24 ஆம் தேதி வரை அனல் காற்று வீசும் என்று, வானிலை மையம் எச்சரித்துள்ளது” குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் தான், “ 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதுமானது” என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி உள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “வழக்கமான வகுப்புகளுக்காக மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியதில்லை” என்று, குறிப்பிட்டார்.

மேலும், “வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்கள் நலன் கருதி, பள்ளிக் கல்வித் துறை முடிவு எடுத்து உள்ளது என்றும், தமிழ் நாட்டில் தொடக்கப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது” என்றும், அவர் கூறினார். 

குறிப்பாக, “தேர்வு இல்லாத மற்ற நாட்களில் ஒன்றாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என்றும்,  வெயிலின் தாக்கம் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும்” பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், விளக்கம் அளித்தார்.

இதனிடையே, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் இந்த அறிவிப்புக்கு, பள்ளி மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.