தமிழகம், கொரோனா என்ற பேரிடரை ஒருபக்கம் போராடி கடந்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இன்னொரு பக்கம் டெங்கு பாதிப்பானது மிக வேகமாக பரவி வருகின்றது. 

சமீபத்திய உதாரணமாக, நங்கநல்லூரில் காய்ச்சலால் மரணமடைந்த சிறுமி ஒருவருக்கு, கொரோனா நெகட்டிவ் என்று வந்தபோதும் டெங்கு பாசிட்டிவ் எனப் பரிசோதனை முடிவுகள் வந்ததாகச் செய்தி வெளியாகியுள்ளது. 

எதிர்க்கட்சி தரப்பிலிருந்து, ``கொரோனாவோடு டெங்குவும் சேர்ந்து பரவ ஆரம்பித்தால் நிலைமை இன்னும் மோசமாகும். அபாயத்தை உணர்ந்து செயல்படுங்கள்" என்று முதல்வருக்கு ஆலோசனை கூறியிருக்கிறார் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

அரசு தரப்பில், டெங்கு பரவலுக்குக்கான காரணமாக சொல்லப்படும் கொசு க்களை ஒழிப்பதற்கான பணிகளையும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு சுகாதாரத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.

தமிழகத்தில் இதுவரை ஏறத்தாழ 2 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் காய்ச்சல், சளி அறிகுறிகள் உள்ள அனைவரும் அவரவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனா். அதேபோன்று காய்ச்சல் பாதிப்பு உள்ளவா்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் புதிதாக கண்டறியப்படும் நோயாளிகள் எண்ணிக்கை உயர்வதை போலவே, கொரோனாவிலிருந்து குணமாவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதேபோல பரிசோதனைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குணமாவோர் விகிதம் அதிகமிருப்பதால், கொரோனாவை எப்படியேனும் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என நம்பிக்கை கூறிவருகிறது தமிழக அரசு.

இந்த சூழலில் அண்மைக்காலமாக மாநிலத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகின்றது. இன்றைய தினம்கூட, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழைக்காலம், கொசுக்களின் உற்பத்தியை வேகமாக அதிகரித்து வருகிறது. விளைவாக கடந்த இரு வாரங்களாக டெங்கு பாதிப்பு பரவலாக உருவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டோா் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக செய்தித்தாளொன்றில், தகவல் கூறப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கும், டெங்கு காய்ச்சலுக்கும் ஏறத்தாழ ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால், அவா்களை அடையாளம் காண இயலாமல் இரண்டு பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாக மருத்துவா்கள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் இப்போதைய சூழலில் காய்ச்சலுடன் வரும் நோயாளிக்கு, முதலில் கொரோனா பரிசோதனை தான் செய்ய வேண்டும் என்ற நிலை இருப்பதால், அதை நோக்கியே அதிகம் செயல்பட வேண்டியுள்ளதாக கூறுகிறார்கள் மருத்துவர்கள். கொரோனாவின் பரிசோதனை முடிவு வரும்வரையில் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதால், சம்பந்தப்பட்ட நோயாளிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதைக் கண்டறிவதற்கு குறைந்தபட்சம் மூன்று நாள்களாகின்றதென கூறுகின்றனர் மருத்துவ வல்லுநர்கள். இதற்கிடையில், பாதிப்பு தீவிரமடையலாம் என்பதால், சிகிச்சையில் சிக்கல் உள்ளது தெரியவந்துள்ளது.

இருப்பினும், சவால்களைக் கடந்து, டெங்கு ஒழிப்புப் பணிகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் பேசும்போது, ``டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், உள்ளாட்சி அமைப்பு நிா்வாகிகள், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், காய்ச்சல் முகாம்களில் கொரோனாவுடன், டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளா்களை, டெங்கு தடுப்பு பணிகளிலும் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகளும், வசதிகளும் அரசிடம் உள்ளன. டெங்கு கொசுக்கள் பரவாத வண்ணம் பொதுமக்கள் விழிப்புணா்வுடனசெயல்பட வேண்டும்" என்று கூறியிருக்கிறார் அவர்.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் பெரும்பாலான இடத்தில், கொசு ஒழிப்புக்கான மருந்து தெளிக்கும் பணியும் நடந்துவருகிறது.

டெங்குவில் இருக்கும் மிகப்பெரிய சிக்கலே, இதற்கு நேரடியான மருந்து கிடையாது என்பதுதான். கொரோனா சிகிச்சையை போலவே டெங்கு சிகிச்சையும், கூட்டு சிகிச்சை முறைதான். அதனாலேயே முதல் நிலையிலேயே டெங்குவை கண்டறிய வேண்டும் என்பார்கள் மருத்துவர்கள். பிற நேரங்களில் இது சாத்தியப்பட்டது என்றாலும், இந்தக் கொரோனா நேரத்தில், இது சாத்தியப்படுவதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. 

டெங்குவால் பாதிக்கப்படும் ஒருவருக்கு, முதலில் அவரின் நோய் எதிர்ப்புத் திறன்தான் என்பதால், அவர்களுக்கு அதேநேரட்த்தில் கொரோனாவுக்கான வாய்ப்பும் அதிகமாகிவிடுகிறது. இப்படி ஒருவர் ஒரே நேரத்தில் கொரோனாவாலும் டெங்குவாலும் ஒருசேர பாதிக்கப்பட்டால், அவருக்கு உயிர் அபாயம் நிறைய இருப்பதாக சென்னையை சேர்ந்த மூத்த மருத்துவரொருவர் கூறுகிறார்.

``கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அனைவரும் வீட்டிலுள்ளதால், குறைந்தபட்சத்துக்கு வீட்டை அனைவரும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். எங்கும் நீர் தேங்க விடாதீர்கள், கொசுக்களின் உற்பத்தியை உங்கள் வீட்டில் தடுங்கள்" என்பதே இப்போதைக்கு சுகாதாரத்துறையினரின் கோரிக்கையாக இருக்கிறது.

பொதுவாக தமிழகத்தில் செப்டம்பர் - நவம்பர் நேரத்தில்தான் டெங்கு அதிகமா இருக்கும். ஆனால் இந்த முறை ஜூலையிலேயே பிரச்னை தொடங்கிவிட்டது. கொரோனா பரவலும் அதிகமாகிவிட்டதால், அரசு இந்த நேரத்தில் மிக மிக அதிக அழுத்தத்துக்கு இடையில்தான் செயல்பட வேண்டியுள்ளது. அரசு இந்தச் சூழலை எப்படிக் கையாளப்போகிறது என்பது, வரும் நாள்களில் தெரியும்!


- ஜெ.நிவேதா