நடிகர் அஜித் 1.25 கோடி நிவாரணம்! எம்.எல்.ஏ.க்களின் தொகுதி நிதி ரூ.1 கோடி பிடித்தம்..
By Aruvi | Galatta | 04:48 PM
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகத் தமிழகத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு கோடி ரூபாய் பிடித்தும் செய்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ள நிலையில், நடிகர் அஜித்குமார் 1.25 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக, 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்குச் சிறிது அளவு கை கொடுக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நலதிட்ட உதவிகளை அறிவித்து வருகிறது.
இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில், சினிமா நடிகர்கள் தொடர்ந்து முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிவாரணம் வழங்கி வருகின்றனர்.
அதன்படி, நடிகர் அஜித்குமார் இதுவரை யாரும் வழங்காத வகையில் அதிகபட்சமாக 1.25 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கி உள்ளார். இதில், 25 லட்சம் ரூபாய் பெப்சி தொழிலார்களுக்கும், ஒரு கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் வழங்கி உள்ளார். முன்னதாக நடிகர் ரஜினிகாந்த், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்கள் நிவாரணம் வழங்கியிருந்தனர்.
மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகத் தமிழகத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாய் பிடித்தும் செய்வதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி, மாநில அளவில் அந்த பணம் ஒருங்கிணைத்துப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
முன்னதாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டும் வகையில் எம்.பி.க்களின் சம்பளம் 30 சதவீதம் குறைக்கப்படுவதோடு, தொகுதி மேம்பாட்டு நிதியும் ரத்து செய்யப்படுவதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார். இதற்கான முடிவு மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இதனிடையே, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்திவைக்கும் முடிவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொகுதிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்குவதை விடுத்து, இருந்த நிதியையும் பறிப்பது எம்.பி.களை நெருக்கடியில் நிறுத்தும் செயல் என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.