தமிழக சட்டசபைக்கு இன்னும் 6 மாதத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இந்த நிலையில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வின் உயர் நிலை கூட்டமும், அதனை தொடர்ந்து செயற்குழு கூட்டமும் கூட்டப்பட்டது. இந்த கூட்டங்களில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்ற பிரச்சினை பூதகரமாக வெடித்தது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த விஷயத்தில் நேருக்கு நேர் விவாதங்களை முன்வைத்தனர். இதனால் செயற்குழுவில் பெரும் பரபரப்பு நிலவியது. செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து, முதல்-அமைச்சர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி தான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு அ.தி.மு.க.வில் நிலவும் உட்கட்சி பிரச்சினையை வெளி கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து கட்சியின் உள் விவகாரங்கள் குறித்து அமைச்சர்கள், நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க கூடாது அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்தனர். சமீபத்தில் சென்னையில் நடந்த அரசு விழா அழைப்பிதழ் மற்றும் விளம்பரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருச்சியில் அக்டோபர் 3 செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரிடம் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, ``வரும் 7 ஆம் தேதி வரை பொறுத்துக்கொள்ளுங்கள். அதன்பிறகு எதுவேண்டுமானாலும் கேளுங்கள். அக்டோபர் 5,6,7 ஆகிய மூன்று நாட்களும் அனைத்து அமைச்சர்களும் சென்னையில் இருக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்" என்ற தகவலைத் தெரிவித்தார். 6ஆம் தேதி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுமா என்ற கேள்விக்கு செய்தியாளர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டவாறு பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இதனிடையே, அதிமுக அவைத்தலைவராக உள்ள மதுசூதனுக்கு உடல்நிலை குறைவு காரணமாக அவைத்தலைவர் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகின. இவர் சசிகலாவை தீவிரமாக ஆதரித்து வந்தவர் என்பதும், ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய காலத்தில் அவருடன் கை கோர்த்து அவருக்கு ஆதரவாக செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தன் உடல்நிலை குறித்து விளக்கமளித்துள்ள மதுசூதனன், `அதிமுக அவைத்தலைவராக நான்தான் நீடிப்பேன். இதில் எந்த மாற்றமும் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

அவைத்தலைவர் பதவி ஜெயலலிதா தனக்கு கொடுத்தது என்று தெரிவித்த மதுசூதனன், ``நான் சாகும் வரை அவைத்தலைவர் பதவியில் தொடர்வேன். அவைத்தலைவர் மாற்றப்படுவதாக வெளியான செய்தி தவறு" என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும், ``ஓபிஎஸ் எந்த நோக்கத்திற்காக தர்மயுத்தம் செய்தாரோ அதை நிறைவேற்றுவார். பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை" என்று தெரிவித்தார்.