சொத்துவரி உயர்வை கண்டித்து ஓபிஎஸ் - இபிஎஸ் போராட்டம்! “முன் வைத்த குற்றச்சாட்டுக்கள் என்ன?”
தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை கண்டித்து, தமிழக முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு, கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது.
பின்னர், அதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ள நிலையில், ஏன் உயர்த்தப்பட்டது?” என்பது குறித்து, தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15 வது நிதி ஆணையமானது, தனது அறிக்கையில் 2022-2023 ஆம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021-2022 ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை அறிவிக்கை செய்ய வேண்டும் என்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும்” என்றும், நிபந்தனைகள் விதித்து உள்ளதை குறிப்பிட்டு இருந்தது.
அத்துடன், “பொருளாதார குறியீடுகள் உயர்ந்து உள்ள நிலையில், சொத்து வரியில் பல ஆண்டுகளாக எந்த உயர்வும் இல்லாததால், உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த வருவாயில், சொத்து வருவாயின் பங்கு பெருமளவு குறைந்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செலவீனம் பல மடங்கு உயர்ந்து உள்ளதாகவும்” தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது.
முக்கியமாக, “இந்தக் காரணங்களின் அடிப்படையில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வு செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்படுவதாக” தமிழ்நாடு அரசு, விளக்கம் அளித்தது.
என்றாலும், தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை கண்டித்து, தமிழக முழுவதும் அதிமுக சார்பில் இன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
அந்த வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
இந்த ஆர்பாட்டத்தின் ஒரு பகுதியாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி , “மக்கள் சொத்து வரி உயர்வை சாதாரணமாக கடந்து சென்று விடுவார்கள் என எண்ணி விடாதீர்கள்; மிக பெரிய போராட்டத்தை முன்னெடுக்க போகிறார்கள் என்றும், இதனை எச்சரிக்கையாக கூறி கொள்ள விரும்புகிறேன்” என்றும், ஆவேசமாக பேசினார்.
மேலும், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களை பற்றி அல்லாமல், அவரது வீட்டு மக்களை பற்றி தான் கவலைப்பட்டு கொண்டு உள்ளார்” என்றும், எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
அதே போல், சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில், அதிமுக தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தின் போது பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், “நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை திமுக பிடித்துள்ளது” என்று, குற்றம்சாட்டினார்.
அத்துடன், “கொரோனா பரவல் முடிவடையாத சூழலில், சொத்துவரி உயர்வு மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது” என்றும், ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.
இதே போல் ராமநாதபுரம், வேலூர், திருவள்ளூர், மதுரை போன்ற மாவட்டங்களில் அதிமுக சார்பில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.