தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து ஆட்சியைப் பிடிக்க முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதனிடையே, கடந்த சில மாதங்களாக அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துவந்தனர். 

அது பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து, கடந்த மாதம் 15-ம் தேதி முதலமைச்சர், துணை முதலமைச்சர் இல்லங்களுக்கு மாறி மாறி சென்று பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள், பிரச்சனைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தனர். பின்னர், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கருத்து கூற அதிமுக நிர்வாகிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும், முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்ய இ.பி.எஸ். தரப்பு மும்முரம் காட்டும் நிலையில், இரு அணிகள் ஒன்றிணைந்தபோது கொடுக்கப்பட்ட வாக்குறுதியான 11 பேர் கொண்டு வழிகாட்டு குழுவை அமைக்க வேண்டுமென ஓபிஎஸ் தரப்பு விரும்புகிறது. இப்படி பல்வேறு சிக்கல்களுக்கு இடையே அதிமுக செயற்குழு கூடியது. இருப்பினும் முதல்வர் வேட்பாளர் தேர்வை குறித்து பேசும்போது, செயற்குழு கூடுவது வழக்கமான நடைமுறை என அமைச்சர் ஜெயக்குமாரும், என்ன முடிவு எடுத்தாலும் தேர்தல் வெற்றியே குறிக்கோள் என அமைச்சர் செல்லூர் ராஜூவும், தற்போது கருத்து கூற முடியாது என கடம்பூர் ராஜூவும் தெரிவித்துள்ளனர். அதிமுக முதலமைச்சர் வேட்பாளர், சசிகலா விவகாரம் ஆகியவை 300 பேர் இருக்கக்கூடிய செயற்குழுவில் விவாதிக்கப்பட வாய்ப்பில்லை என மூத்த பத்திரிகையாளர் டி.ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்

கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதன்படி நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், கலாச்சாரத்தை ஆய்வு செய்யும் மத்திய அரசின் குழுவில் த​மிழர்களை நியமிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

மேலும் கொரோனா பரவல் குறைந்துள்ளதை ஏற்றுள்ள மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என்றும், கொரோனா கால செயல்பாட்டுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இருமொழிக்கொள்கையே அதிமுக அரசின் கொள்கை. மொழி திணிப்பை அதிமுக அரசு ஏற்காது, அதிமுக நிர்வாகிகள் ஒன்றுபட்ட சிந்தனயோடு ஒன்றிணைந்து செயல்பட்டு மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். மீண்டும் ஆட்சி மலர்ந்திட உழைப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கூட்டத்துக்கு முன் அமைச்சர்கள் சிலர் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர். இருமொழிக் கொள்கை, நீட் தேர்வைக் கைவிட வேண்டும், ஜிஎஸ்டி தொகையை வழங்க வேண்டும், கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழ் அறிஞர்களைச் சேர்க்க வேண்டும், கச்சத்தீவு மீட்பு, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு என மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. தீர்மானத்திற்குப் பின்னர் தொடங்கிய கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை, துணை ஒருங்கிணைப்பாளர் உட்பட 7 நிர்வாகிகள் பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என அதிமுக வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் 5 மணி நேரமாக நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டம் நிறைவு பெற்றது.