கொரோனா ஊரடங்கு காலத்தில், பரபரப்பான அரசியல் நிகழ்வுகளை மக்களிடம் விவாதப் பொருளாக்குவதில் சமூக ஊடகங்களே முக்கியப் பங்காற்றுகின்றன. சட்டமன்ற தேர்தலுக்கான நேரமும் நெருங்குவதால், கட்சிகளுக்கு இடையிலான மோதல்களும் சலசலப்புகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

அரசியல் கட்சிகளின் நகர்வுகளும், 75 சதவிகிதம் தகவல் தொழில்நுட்ப அணிகளும் சமூக ஊடகங்களில் தான் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில், அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியில் ஏராளமான பொறுப்பாளர்களை நியமித்து, ஹைடெக்காக மாற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது உத்தரவிட்டுள்ளார். 

அ.தி.மு.க ஐ.டி விங்கை மேலும் சுறுசுறுப்பாக்க சென்னை, வேலூர், திருச்சி, கோவை, மதுரை என ஐந்து மண்டலங்களாகச் சில நாள்களுக்கு முன்னர் பிரித்தனர். அதன் பிறகு, அ.தி.மு.க-வின் செயல்பாடுகள் அதிகமானதாக தெரிகிறது.

கறுப்பர் கூட்டம் விவகாரத்தில், திமுகவுக்கும், கறுப்பர் கூட்ட குழுவினருக்கும் தொடர்பிருப்பதை அம்பலப்படுத்தியது, அதிமுக ஐ டி விங் தான் என்று சொல்லப்படுகிறது. அதனாலேயே, முதலமைச்சர், ஐ.டி விங்கை இன்னும் பலமாக்க உத்தரவிட்டுள்ளதாக பத்திரிகைகளுக்கு பேட்டியளித்திருக்கிறார் அவர். ஐ டி விரிவாக்கத்திற்கு, அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் செலவு செய்ய வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

தேர்தலுக்கும் ஐ.டி விங்கின் பணி முக்கியமானது என்பதால் மாவட்டம்தோறும் புதிய கிளைகளை உருவாக்கவும், தமிழகம் முழுவதும் 45,000 இளைஞர்களுக்குப் பொறுப்பாளர் பதவி வழங்கவும், கிராமப்புற இளைஞர்களுக்குத் தொழில்நுட்பப் பயிற்சியளித்து உறுப்பினராக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுபற்றி பத்திரிகை ஒன்றில் பேசியிருந்த அதிமுக நபரொருவர், ``மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் ஒரு வார்டுக்கு 16 உறுப்பினர்களைச் சேர்ப்பது, ஒவ்வோர் உறுப்பினரும் 20 வாட்ஸ்அப் குழுக்களில் இயங்குவது, அதன் மூலம் ஆட்சியின் நலத் திட்டங்களையும் எதிர்க்கட்சிகள் பற்றிய விமர்சனங்களையும் கொண்டுசெல்வது என்று திட்டமிட்டுள்ளோம். 

இதற்காகக் கட்சி சார்பில் முதற்கட்டமாக 25,000 ஸ்மார்ட் போன்கள் வழங்குவதுடன், இன்டர்நெட் உள்ளிட்ட செலவுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை ஊக்கத்தொகையாகவும் வழங்கத் திட்டமிட்டுள்ளனர். முக்கியப் பொறுப்பாளர்களுக்கு லேப்டாப்பும் வழங்கவுள்ளனர். கொரோனா ஊரடங்கு இப்படியே தொடர்ந்தால், ஐ.டி விங்தான் கட்சிக்குப் பக்கபலமாக இருக்கும். அதற்காக எவ்வளவு செலவு செய்யவும் கட்சி தயாராகிவிட்டது’’ என்று கூறியிருக்கிறார்.

ஸ்மார்ட்போன் உள்ளிட்ட வெகுமதிகளை வழங்கும் திட்டத்தை சேலம் மாவட்டத்திலிருந்து தொடங்கி மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தவுள்ளாராம் எடப்பாடி. மற்றபடி, சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க ஐ.டி. பிரிவை வலுப்படுத்தும் பொருட்டு 80 ஆயிரம் நிர்வாகிகளை நியமிக்கும் வேலையில் அதிமுக தலைமை இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அரசியல் மற்றும் சமூகவலைதள திறனறிவு ஆன்லைன் தேர்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளது. இதில் 500 கேள்விகள் கேட்கப்படும் என்றும், சென்னையில் மட்டும் 6 ஆயிரம் விண்ணப்பங்கள் இதுவரை வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழகம் முழுவது 5 மண்டலங்களாகப் பிரித்து தலைமை அறிவிக்க இருக்கிறது. இதில், மத்திய மண்டல செயலாளராக வைத்திலிங்கம் பொறுப்பேற்க உள்ளார். தலைமையின் செயல்பாட்டில் அதிருப்தியிலிருந்த வைத்திலிங்கம், தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், சோழ மண்டலம் என அழைக்கப்படுகிற மத்திய மண்டலம் தன் கட்டுப் பாட்டுக்குள் இருக்க வேண்டும் என நினைத்து செயல்பட தொடங்கி விட்டார். மீண்டும் பழையபடி களத்தில் இறங்கி, கட்சிப் பணிகளை செய்யத் தயாராகி வருகிறார்’’ என்று தெரிவித்தனர்.

இப்படி தேர்தல் களத்துக்கு தீவிரமாக இயங்கத் தொடங்கியிருக்கிறது அ.தி.மு.க.