“என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் என்னை ஏன் கட்சியில் இருந்து நீக்கினிங்க” என்று, ஈபிஎஸ் - ஒபிஸுக்கு அதிமுக நிர்வாகி ஒருவர் நோட்டீஸ் அனுப்பி உள்ள சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா பேசிய ஆடியோ தான், அக்கட்சியின் சமீபத்திய ஹாட் டாப்பிகாக இருந்து வருகிறது. 

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களிடையே சசிகலா பேசும் ஆடியோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. இதனால், அதிமுகவை மீண்டும் சசிகலா கைப்பற்றப் போகிறரா? என்கிற கேள்வியும் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

அதே நேரத்தில், அதிமுக எம்எல்ஏ கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக அதிரடியாகத் தீர்மானம் நிறைவேற்றி, “சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பி. உள்பட மொத்தம் 16 பேர் அதிமுக வில் இருந்து முதற்கட்டமாக அதிரடியாக நீக்கப்பட்டனர். அதன் பிறகு, சசிகலாவுடன் பேசி வரும் மற்ற தொண்டர்களையும் ஒவ்வொருவராக அதிமுக தலைமை, கட்சியில் இருந்து நீக்கி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தின் பல அதிமுக தொண்டர்கள் சமீபத்தில், அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படியாக, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி ரூபம் கே வேலவன் என்பவரும், அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், யாரும் எதிர் பார்க்காத வகையில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி ரூபம் கே வேலவன் சார்பில், அவரது வழக்கறிஞர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருகிணைப்பாளர்களான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

வழக்கறிஞர் மூலம் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி உள்ள நோட்டீஸில், “அதிமுகவை விட்டு நீக்கிய நடவடிக்கை தம்மை ஒரு போதும் கட்டுப்படுத்தாது” என்று குறிப்பிட்டு உள்ளார். 

“கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் சேர்ந்து ஓயாத கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக” ரூபம் கே. வேலவன் அந்த நோட்டீஸில் சுட்டிக்காட்டி உள்ளார்.

அத்துடன், “அதிமுக கட்சி பணியை அங்கீகரிக்கும் வகையில், கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் அதிமுக மாணவர் அணி தலைவர் பொறுப்பு  வழங்கப்பட்டதாகவும்” அவர் கூறியிருக்கிறார்.

“கடந்த 17 ஆண்டுகள் விளாத்திகுளம் ஒன்றியக் கழக செயலாளராக பதவி வகித்துள்ளதாகக் குறிப்பிட்டிருக்கும் வேலவன், கட்சி விரோத நடவடிக்கைகளில் நான் ஒருபோதும் ஈடுபட்டது இல்லை” என்றும், அவர் தெரிவித்து உள்ளார். 

“ஆனால், கடந்த ஜூன் 27 ஆம் தேதி அதிமுக கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாகச் செயல்பட்டதாக அதிமுக அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை நீக்கி இருப்பதாக வெளியான அறிவிப்பை”யும், அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.

“அதிமுகவின் திருத்தப்பட்ட துணை விதிகளின் படி, தம்மிடம் எவ்வித விளக்கமும் கேட்காமல் நீக்கி இருப்பது செல்லாதது என்றும், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அறிவிப்பு எவ்வகையிலும் தன்னை கட்டுப்படுத்தாது என்றும் ரூபம் கே. வேலவன்” அதில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

குறிப்பாக, அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியதற்காக, கட்சியில் இருந்து வேலவன் நீக்கப்பட்டார்” என்பது, அதிமுகவில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

ஆனால், கட்சித் தலைமை தான், ஒரு தொண்டனுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்பது உலக வழக்கம். ஆனால், அதற்கு மாறாக, ஒரு கட்சித் தொண்டர், தனது கட்சியின் தலைமைக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருப்பது, அதிமுகவினரிடையே மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.