முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் வீட்டின் ரெய்டு நடத்தப்படுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக ஆட்சியில் வணிகவரி துறை அமைச்சராக இருந்த கே.சி. வீரமணி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டின் பேரில், அவரது வீட்டில் இன்று காலை 6.30 மணி முதல், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

கே.சி வீரமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ.90 கோடி சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிந்து உள்ளது.

முக்கியமாக, கே.சி. வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இதில் சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீரமணியின் உறவினர்கள், அவருக்கு சொந்தமான இடங்களில் எல்லாம் இந்த சோதனையானது அதிரடியாக நடைபெற்று வருகிறது.

அதே போல், “ஜோலார்பேட்டை இடையம் பட்டியில் உள்ள வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபம், அவரது வீடு ஆகியவற்றிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. 

இவற்றுடன், திருப்பத்தூரில் உள்ள அவருக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் ஒன்றிலும் தீவிரமாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான், திருப்பத்தூர் மாவட்டம் இடையம்பட்டியில் இருக்கும் கே.சி வீரமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதை கண்டித்து அதிமுகவினர் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தின் ஒரு பகுதியாக, திமுக அரசை கண்டித்தும் லஞ்ச ஒழிப்புத் துறையை கண்டித்தும் அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

போராட்டம் குறித்து விரைந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். 

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீசாரை கீழே தள்ளிவிட்டனர். மேலும், வேனில் இருந்து இறங்கிய அதிமுகவினர் சிலர், போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

வீரமணி வீட்டில் ரெய்டு நடத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், அப்போது போலீசாரை கீழே தள்ளி விட்டனர். இதனால், அந்த பகுதியில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

இதனிடையே, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்திய நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் வீட்டின் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.