கள்ள ஓட்டுபோட வந்த நபரை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டையை கழற்றி அரை நிர்வாணப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அசம்பாவித சம்பவங்கள் மற்றும் குளறுபடிகள் நடந்த குறிப்பிட்ட 7 வாக்குச்சாவடிகளில் மட்டும் இன்றையத் தினம் மறுவாக்குப் பதிவு நடந்துகொண்டிருக்கிறது.

அதாவது, தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்குான வாக்குப் பதிவானது இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், வழக்கத்தை விட சற்று மந்தமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த வாக்குபதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஆயிரத்து 369 மாநகராட்சி கவுன்சிலர், 3 ஆயிரத்து 824 நகராட்சி கவுன்சிலர், 7 ஆயிரத்து 409 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 602 பதவி இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

அதன்படி, நடைபெற்ற தேர்தலில் தமிழகத்தின் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் பண விநியோகம் நடைபெறுவதாக அரசியல் கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டின. இதனால், குறிப்பிட்ட சில இடங்களில் லேசான சலசலப்பும் ஏற்பட்டது. 

அப்போது, சென்னை ராயபுரத்தில் உள்ள 49 வது வார்டில் திமுக வினர் சிலர் அத்து மீறி வாக்குச் சாவடிகளுக்குள் நுழைந்து, கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக தரப்பில் பகிரங்கமாக குற்றசாட்டப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக நிர்வாகி ஒருவரை அதிமுகவினர் அந்த பகுதியில் மடக்கி பிடித்தனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அத்துடன், கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக நிர்வாகியை மடக்கப் பிடித்த அதிமுகவினர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையிலேயே அவரை சிலர் தாக்க தொடங்கினர். 

இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அப்போது பிடிபட்ட அந்த திமுக நபரை “அடிக்க வேண்டாம்” என்று, அவரது கையை கட்டும்படியும் ஜெயக்குமார் கூறியதாக கூறப்படுகிறது. 

மேலும், பிடிப்பட்ட அந்த நபரின் “சட்டையை கழட்டும் படி” மிக கடுமையாக ஜெயக்குமார் கூறினார் என்றும், அந்த நபரிடம் ஜெயக்குமார் கடுமையாக நடந்துகொண்டார் என்றும் கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாகவே, பிடிப்பட்ட அந்த நபரின் சட்டை கழற்றப்பட்டு, அவரது கைகளும் கட்டப்பட்டன. 

இதனையடுத்து, அந்த நபர் மேல் ஆடை (சட்டை) இல்லாமல், அரை நிர்வாணமாக அந்த நபர் அதிமுகவினரால் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

குறிப்பாக, “வேற வார்டை சேர்ந்த உனக்கு, இந்த வார்டில்  என்ன வேலை? என்றும், திமுகவைச் சேர்ந்த நீ எத்தனை கள்ள ஓட்டு போட்டாய்” என்றும், அந்த நபரிடம் ஜெயக்குமார் கேள்வி கேட்டார். 

அதற்கு அந்த நபர், பதில் அளித்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர், திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பிடிப்பட்ட நபரை சட்டையை கழற்றவைத்து ஊர்வலமாக அதிமுகவினர் அழைத்து சென்ற நிலையில், அந்த நபருடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் உடன் சென்றார். இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சமூக ஊடகங்களில் இது தொடர்பான வீடியோ வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஒரு நபரை சட்டை கழற்றி அரை நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.